வணக்கம் Tnpsc Aspirants! ஏப்ரல் 05 முதல் 08, 2026 வரையிலான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தேர்வர்களுக்கான முக்கிய நடப்பு நிகழ்வுகள் மற்றும் முக்கியக் GK குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
Tamil Nadu Current Affairs | தமிழ்நாடு நடப்பு நிகழ்வுகள்:
இந்தியாவின் தொழில் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம் - ரிசர்வ் வங்கி அறிக்கை
- பொருளாதார வளர்ச்சி: 2024-25 நிதியாண்டிற்கான ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்களின்படி, 16% பொருளாதார வளர்ச்சியுடன் இந்தியாவின் தொழில் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.
- முதலீடுகள்: சென்னை, கோவை, தூத்துக்குடி, மதுரை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட தொழில் முதலீட்டாளர் மாநாடுகள் மூலம் தற்போதைய அரசு ரூ. 160.53 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளது.
- அசுர வளர்ச்சி: கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டின் தொழில் உற்பத்தி 82.6% அளவுக்கு அபார வளர்ச்சியை எட்டியுள்ளது. தொழிற்சாலைகளில் ரூ. 9.65 லட்சம் கோடி மதிப்பிலான பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
- அதிக தொழிற்சாலைகள்: இந்தியாவில் உள்ள மொத்த தொழிற்சாலைகளில் 15.43% தமிழ்நாட்டில்தான் உள்ளன.
- வலுவான பணியாளர்கள்: தமிழ்நாடு உறுதியான தொழில்துறை பணியாளர்களைக் கொண்ட மாநிலமாகத் திகழ்கிறது. இந்த வளர்ச்சிக்கு மாநில அரசின் கொள்கை முடிவுகளும், உற்பத்தி மேம்பாட்டு நடவடிக்கைகளுமே முக்கியக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சாதனை: தொழில் வளர்ச்சியில் முன்னணியில் இருந்த மகாராஷ்டிரா மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியாவின் அதிவேகமாக வளரும் பெரிய மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது.
சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: 9 போலீசாருக்கு தூக்கு தண்டனை
- நீதிமன்றத் தீர்ப்பு: 2020-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ் (58), மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் காவல் நிலைய விசாரணையின் போது கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில், குற்றவாளிகளான 9 போலீசாருக்கும் தூக்கு தண்டனை (மரண தண்டனை) விதித்து மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் ஏப்ரல் 6, 2026 அன்று அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.
- நீதிபதியின் கருத்து: இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி. முத்துக்குமரன், "இது அரிதினும் அரிதான வழக்கு (Rarest of rare case). மக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரே இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்டதால் அவர்களுக்கு சாதாரண தண்டனை வழங்க முடியாது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கடுமையான தண்டனை அவசியம்" என்று தெரிவித்தார்.
- அபராதம் மற்றும் இழப்பீடு: மரண தண்டனை மட்டுமின்றி, குற்றவாளிகளான 9 பேருக்கும் சேர்த்து மொத்தம் ரூ. 1.40 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையை பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடாக வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- குற்றவாளிகள்: முன்னாள் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமைக் காவலர்கள் முருகன், சாமிதுரை மற்றும் 4 காவலர்கள் என மொத்தம் 9 பேருக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. (இந்த வழக்கில் கைதான 10-வது நபரான சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, 2020-லேயே கொரோனா தொற்றால் உயிரிழந்துவிட்டார்).
- பின்னணி: கடந்த 2020 ஜூன் மாதம் கொரோனா ஊரடங்கு விதிகளை மீறி இரவு நேரத்தில் கடையைத் திறந்து வைத்திருந்ததாகக் கூறி, தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகியோரை சாத்தான்குளம் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்கள் விடிய விடிய கொடூரமாகத் தாக்கப்பட்டதில் அடுத்தடுத்த நாட்களில் இருவரும் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த வழக்கை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிபிஐ (CBI) விசாரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் 6 புதிய மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவியேற்பு:
- தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு (Rajya Sabha) போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்ட 6 புதிய உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில் பதவியேற்றுக்கொண்டனர்.
- பின்னணி: தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 ராஜ்யசபா எம்.பி.க்களின் (திமுக, அதிமுக, தமாகா) பதவிக்காலம் ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிவடைந்ததால், காலியாக இருந்த இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.
- கட்சிகளுக்கான இட ஒதுக்கீடு: சட்டமன்ற உறுப்பினர்களின் பலத்தின் அடிப்படையில் திமுக கூட்டணிக்கு 4 இடங்களும், அதிமுக கூட்டணிக்கு 2 இடங்களும் கிடைத்தன.
தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள்:
- திமுக கூட்டணி: திருச்சி சிவா (திமுக - 6வது முறை), கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் (திமுக), கிறிஸ்டோபர் திலக் (காங்கிரஸ்), எல்.கே.சுதீஷ் (தேமுதிக).
- அதிமுக கூட்டணி: மு. தம்பிதுரை (அதிமுக), அன்புமணி ராமதாஸ் (பாமக - 3வது முறை).
- பதவியேற்பு: இவர்கள் 6 பேரும் துணைக்குடியரசுத் தலைவர் முன்னிலையில் தமிழில் உறுதிமொழி ஏற்று, பதவியேற்றுக்கொண்டனர். இவர்களில் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், கிறிஸ்டோபர் திலக், மற்றும் எல்.கே.சுதீஷ் ஆகியோர் முதன்முறையாக மாநிலங்களவை உறுப்பினராகப் பொறுப்பேற்றுள்ளனர்.
தமிழக அரசு மகப்பேறு விடுமுறை விதிகளில் அதிரடி மாற்றம் 2026:
- 3-வது குழந்தைக்கும் விடுப்பு: இதுவரை முதல் இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே 365 நாட்கள் (1 வருடம்) ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட்டது. இனி மூன்றாவது குழந்தைக்கும் 12 வாரங்கள் (84 நாட்கள்) ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு புதிய அரசாணை (GO) வெளியிட்டுள்ளது.
- இரட்டை குழந்தைகள் விதிவிலக்கு: முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்திருந்தாலும், தாய் தனது அடுத்த (இரண்டாவது) பிரசவத்திற்கும் 365 நாட்கள் விடுப்பு பெற தகுதியுடையவர்.
- பணிக்குச் சேர்ந்த பின் விடுப்பு: குழந்தை பிறந்த பிறகு அரசுப் பணியில் சேரும் பெண் ஊழியர்களுக்கு, பிரசவத் தேதியிலிருந்து 365 நாட்களில் மீதமுள்ள நாட்களை விடுப்பாக எடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- தத்தெடுக்கும் தாய்களுக்கான விடுப்பு: உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, தத்தெடுக்கப்படும் குழந்தையின் வயது எதுவாக இருந்தாலும், அந்தத் தாய்க்கு 12 வாரங்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட வேண்டும் என விதிகள் திருத்தப்பட்டுள்ளன. இதற்கு முன்னதாக 3 மாதங்களுக்கு குறைவான குழந்தையைத் தத்தெடுத்தால் மட்டுமே இந்த விடுப்பு வழங்கப்பட்டது.
National Current Affairs | தேசிய நடப்பு நிகழ்வுகள் :
சைக்கிள் மூலமாக எவரெஸ்ட் அடிவாரம் சென்ற முதல் இந்தியப் பெண்:
- சாதனையாளர்: உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த ஆசிரியை திவ்யா சிங் (வயது 28).
- சாதனை: சைக்கிள் மூலமாக எவரெஸ்ட் அடிவார முகாமை (Base Camp) சென்றடைந்த முதல் இந்தியப் பெண் மற்றும் உலகின் 2-வது பெண் என்ற வரலாற்றுச் சாதனையை இவர் படைத்துள்ளார்.
- பயண விவரம்: நேபாள தலைநகர் காத்மாண்டுவில் தனது பயணத்தைத் தொடங்கிய இவர், சுமார் 14 நாட்கள் கடினமான பயணத்திற்குப் பிறகு 17,560 அடி உயரத்தில் உள்ள அடிவார முகாமை அடைந்துள்ளார்.
- சவால்கள்: இந்தப் பயணத்தில் மைனஸ் 12 டிகிரி கடும் குளிர், குறைவான ஆக்சிஜன் மற்றும் அதிவேகக் காற்று ஆகியவற்றை அவர் எதிர்கொண்டார். தினமும் 10 முதல் 12 மணிநேரம் செங்குத்தான மற்றும் கரடுமுரடான மலைப்பாதைகளில் சைக்கிள் ஓட்டியுள்ளார். சைக்கிள் ஓட்ட முடியாத இடங்களில் அதனைத் தோளில் சுமந்து கொண்டு முன்னேறியுள்ளார்.
- பயண வழி: சலேரி, சுர்கே, பக் டிங், நம்ச்சே பஜார், லோபுச்சே, கோரக் ஷெப் போன்ற பல சவாலான இடங்களைக் கடந்து இந்த இலக்கை எட்டியுள்ளார்.
பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு, பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பிரதமர் மோடி உறுதி
- பாஜகவின் 47-வது நிறுவன தினத்தை முன்னிட்டு கட்சி நிர்வாகிகளிடையே காணொலி வாயிலாகப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி பின்வரும் முக்கியக் கருத்துகளைத் தெரிவித்தார்:
- பெண்களுக்கான இடஒதுக்கீடு: நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நிறைவேற்றுவதில் ஒன்றிய அரசு தீவிரமாக உள்ளது. இந்த சட்டம் வருகிற 2029-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் நடைமுறைக்கு வருவதை உறுதி செய்யும் வகையில் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.
- பொது சிவில் சட்டம் மற்றும் ஒரே நாடு ஒரே தேர்தல்: பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்குவதைத் தொடர்ந்து, பொது சிவில் சட்டம் (Uniform Civil Code) மற்றும் ஒரே நாடு ஒரே தேர்தல் ஆகிய இரண்டு திட்டங்களையும் செயல்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது. இவை அரசின் இலக்குத் திட்டங்களாகும். இது குறித்து நாடு முழுவதும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
- பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு: பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது தமது அரசின் மிகப்பெரிய சாதனையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நமோ ட்ரோன் தீதி' (Namo Drone Didi Yojana) திட்டத்தில் கர்நாடகா முதலிடம்:
- பின்னணி: விவசாயப் பணிகளை மேம்படுத்துவதற்காகவும், மகளிர் சுய உதவிக் குழுக்களைச் (SHG) சேர்ந்த பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காகவும் மத்திய அரசால் 'நமோ ட்ரோன் தீதி' (NDDY) திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ட்ரோன் பைலட் பயிற்சிகள் மற்றும் ட்ரோன்கள் வழங்கப்படுகின்றன.
- கர்நாடகாவின் சாதனை: இத்திட்டத்தின் கீழ், இந்தியாவில் அதிகபட்சமாக கர்நாடக மாநிலத்தில் 145 சுய உதவிக் குழுப் பெண்கள் ட்ரோன் பைலட் பயிற்சி பெற்று முதலிடத்தில் உள்ளனர். கர்நாடகாவிற்கு அடுத்தபடியாக உத்தரப் பிரதேசம் (128) மற்றும் ஆந்திரப் பிரதேசம் (108) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
- மாவட்ட வாரியான நிலவரம்: கர்நாடக மாநிலத்திற்குள், கொப்பல் மாவட்டம் 13 பயிற்சி பெற்ற பெண்களுடன் முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து கலபுரகி (12) மற்றும் மாண்டியா (11) ஆகிய மாவட்டங்களும் உள்ளன.
- பயிற்சி மற்றும் பலன்கள்: இத்திட்டத்தின் மூலம் பெண்கள் விவசாய நிலங்களில் மருந்து தெளிப்பது போன்ற பணிகளுக்கு ட்ரோன்களை பயன்படுத்துகின்றனர். இதன்மூலம் மாதம் ரூ.1 லட்சம் வரை கூட வருமானம் ஈட்டுவதாக இந்தப் பயிற்சி பெற்ற பெண்களில் ஒருவரான ஆஷா ராணி என்பவர் தெரிவித்துள்ளார். ஊறுகாய், அப்பளம் போன்றவற்றை மட்டுமே சுய உதவிக் குழுப் பெண்கள் தயாரிப்பார்கள் என்ற நிலையை மாற்றி, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வகையில் இத்திட்டம் அமைந்துள்ளது.
- திட்டத்தின் நிதி ஒதுக்கீடு: 2023-24 முதல் 2025-26 வரையிலான காலத்திற்கு இத்திட்டத்திற்கென ₹1,261 கோடி செலவில் 15,000 ட்ரோன்களை வழங்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகழ்வுகள் (Science and Technology Current Affairs) :
உலகின் முதல் 10G U6GHz இணையச் சேவையை ஐக்கிய அரபு அமீரகம் (UAE) அறிமுகப்படுத்தியுள்ளது
- உலகின் முதல் “10 கிகா” நாடு: SAMENA கவுன்சில் தலைவர்கள் உச்சிமாநாடு 2026-ல், உலகின் முதல் வணிக ரீதியிலான upper 6GHz (U6GHz) இணைய நெட்வொர்க்கை ஐக்கிய அரபு அமீரகம் (UAE) அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. இதன்மூலம் உலகின் முதல் “10 கிகா” நாடு என்ற மைல்கல்லை UAE எட்டியுள்ளது.
- U6GHz ஸ்பெக்ட்ரம்: இந்த ஸ்பெக்ட்ரம் 6425–7125 MHz அதிர்வெண் வரம்பில் செயல்படுகிறது. இது "தங்க ஸ்பெக்ட்ரம்" (golden spectrum) என்று அழைக்கப்படுகிறது. இது அதிக பரப்பளவு மற்றும் அதிக டேட்டாத் திறனை தடையின்றி வழங்குகிறது.
- இணைய வேகம்: மேம்படுத்தப்பட்ட 5G கட்டமைப்பின் கீழ், இந்த நெட்வொர்க் நொடிக்கு 10 Gbps (Gigabits per second) வரையிலான அதிவேக டவுன்லோடு வேகத்தையும், 1 Gbps அப்லோடு வேகத்தையும் வழங்குகிறது.
- பயன்பாடுகள் மற்றும் தொழில்நுட்பம்: செயற்கை நுண்ணறிவு (AI), கிளவுட் கம்ப்யூட்டிங், அதிவேக லைவ் ஸ்ட்ரீமிங் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களுக்கு தேவையான குறைவான தாமத நேரத்தை (low latency) இது உறுதி செய்கிறது.
- செயல்பாட்டுப் பின்னணி: இந்த ஸ்பெக்ட்ரம் 2024-ல் மொபைல் சேவைகளுக்கு ஒதுக்கப்பட்டது. 2025-ல் வெற்றிகரமான கள ஆய்வுகள் நடத்தப்பட்டு, தற்போது 2026-ல் முழுமையான வணிக பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
- எதிர்காலத் தொழில்நுட்பம்: இந்த U6GHz நெட்வொர்க் அறிமுகம் என்பது இணைய வேகத்திற்கான மேம்பாடு மட்டுமல்ல; இது எதிர்காலத்தில் வரவிருக்கும் 6G தொழில்நுட்பத்திற்கான அடித்தளமாகவும், ஸ்மார்ட் நகரங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளுக்கான ஒரு முக்கிய படியாகவும் பார்க்கப்படுகிறது.
தமிழகக் கடலோரப் பகுதியில் புதிய கடல்வாழ் நூற்புழு (Nematode) இனங்கள் கண்டுபிடிப்பு
- இந்திய விலங்கியல் ஆய்வு மையத்தின் (Zoological Survey of India - ZSI) ஆராய்ச்சியாளர்கள், தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் தனித்து வாழும் இரண்டு புதிய கடல்வாழ் நூற்புழு (Nematode) இனங்களை சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். இந்தியாவின் கடல்சார் பல்லுயிர் வளத்தை எடுத்துக்காட்டும் வகையில் இந்த கண்டுபிடிப்பு அமைந்துள்ளது.
புதிய இனங்களின் பெயர்கள் மற்றும் சிறப்பம்சங்கள்:
"கோரோனோனெமா த்ரிதி" (Corononema dhriti):
- ZSI-யின் இயக்குநர் டாக்டர் த்ரிதி பானர்ஜியை கௌரவிக்கும் விதமாக இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.
- உலக அளவில் இந்த பேரினத்தைச் சேர்ந்த நான்காவது அறியப்பட்ட இனம் இதுவே ஆகும் (இதற்கு முன் ஆஸ்திரேலியா, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன).
- இது கடல் அடிமட்ட (benthic) சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு தகவமைத்துக்கொள்ளும் தனித்து வாழும் கடல் நூற்புழுவாகும்.
"எபாகாந்தியன் இண்டிகா" (Epacanthion indica):
- இந்தியா என்ற நாட்டின் பெயரைக் குறிக்கும் வகையில் இது பெயரிடப்பட்டுள்ளது.
- இது நுண்ணுயிரிகளை மட்டும் உண்ணும் மற்ற நூற்புழுக்களில் இருந்து மாறுபட்டு, பிரத்தியேகமான தாடைகள் (mandibles) மற்றும் பல் போன்ற அமைப்புகளைக் கொண்ட ஒரு நுண் வேட்டையாடும் (microscopic predator) புழுவாகும்.
சுற்றுச்சூழல் முக்கியத்துவம்: நூற்புழுக்கள் (Nematodes) என்பவை ஒட்டுண்ணிகளாகவும், மண்ணிலும், நன்னீர் மற்றும் கடல்நீரிலும் வாழக்கூடியவை. இந்த கடல்வாழ் நூற்புழுக்கள் கரிமப் பொருட்களை சிதைப்பதன் மூலம் ஊட்டச்சத்து சுழற்சிக்கு உதவுகின்றன. மேலும், பருவநிலை மாற்றத்தால் கடல் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிப்பதற்கான உயிரியல் குறிகாட்டிகளாகவும் (bio-indicators) இவை செயல்படுகின்றன.
இந்தியாவின் அணுசக்தித் திட்டத்தில் புதிய மைல்கல்: கல்பாக்கம் ஈனுலை (PFBR) 'கிரிட்டிக்கலிட்டி' நிலையை எட்டியது
- புதிய சாதனை: தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் உள்ள 'மாதிரி அதிவேக ஈனுலை' (Prototype Fast Breeder Reactor - PFBR) அதன் முக்கிய கட்டமான 'கிரிட்டிக்கலிட்டி' (Criticality) நிலையை எட்டியுள்ளது. இது இந்தியாவின் சிவில் அணுசக்தித் திட்டத்தில் ஒரு பெரிய மைல்கல்லாகும்.
- கிரிட்டிக்கலிட்டி (Criticality) என்றால் என்ன?: கிரிட்டிக்கலிட்டி என்பது அணு உலையில் எந்தவொரு வெளிப்புற நியூட்ரான் உள்ளீடும் இல்லாமல், தொடர்ந்து நிலையான அணுக்கரு பிளவுத் தொடர்வினை (nuclear fission chain reaction) நடைபெறும் நிலையைக் குறிக்கிறது. இது அணு உலையின் செயல்பாட்டிலும் பாதுகாப்பு சரிபார்ப்பிலும் மிக முக்கிய கட்டமாகும்.
- கல்பாக்கம் ஈனுலையின் சிறப்பம்சங்கள்: இந்த உலை 500 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்டது. இது கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டிலேயே முழுவதும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த உலையில் ப்ளூட்டோனியம்-அடிப்படையிலான எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது. இதன் சிறப்பு என்னவென்றால், இது பயன்படுத்தும் எரிபொருளை விட அதிக பிளவுபடும் எரிபொருளை (fissile material) உருவாக்கும் திறன் கொண்டது.
- இந்தியாவின் 3-கட்ட அணுசக்தித் திட்டம்: டாக்டர் ஹோமி பாபா அவர்களின் கனவான இந்தியாவின் மூன்று கட்ட அணுசக்தி திட்டத்தின் 2-வது கட்டத்திற்கு இந்தியா தற்போது நுழைந்துள்ளதை இது குறிக்கிறது. அடுத்ததாக 3-வது கட்டத்தில், இந்தியாவில் அபரிமிதமாக உள்ள தோரியம் (Thorium) இருப்புக்களைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பது இலக்காக உள்ளது.
- எதிர்காலப் பயன்கள்: 2070-ஆம் ஆண்டுக்குள் பூஜ்ஜிய உமிழ்வு (net zero emissions) என்ற இந்தியாவின் இலக்கை அடையவும், எரிபொருளுக்காக வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதை குறைக்கவும், 2047-ஆம் ஆண்டிற்குள் 100 ஜிகாவாட் அணுசக்தி மின் உற்பத்தியை அடையவும் இந்த தொழில்நுட்பம் மிகவும் உதவியாக இருக்கும்.
வங்கதேசத்தில் அவசரகால தட்டம்மை தடுப்பூசி முகாம் தொடக்கம்
- பின்னணி: வங்கதேசத்தில் தட்டம்மை (Measles) நோய் வேகமாகப் பரவி வருவதால், பொது சுகாதாரத்தில் பெரும் கவலை எழுந்துள்ளது. நோயைக் கட்டுப்படுத்தவும், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பிரிவினரிடையே கடுமையான பாதிப்புகளைத் தடுக்கவும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளை இலக்காகக் கொண்டு அவசரகால தடுப்பூசி முகாமை வங்கதேசம் தொடங்கியுள்ளது.
- தட்டம்மை நோய் (Measles): தட்டம்மை என்பது பாராமிக்ஸோவைரஸ் (paramyxovirus) குடும்பத்தைச் சேர்ந்த வைரஸால் ஏற்படும் அதிக தொற்றுத்தன்மை கொண்ட மற்றும் தீவிரமான ஒரு காற்றுவழி நோயாகும். இது நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத எந்த வயதினரையும் பாதிக்கலாம் என்றாலும், முக்கியமாக குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது. இது முதலில் சுவாச மண்டலத்தைத் தாக்கி, பின்னர் உடல் முழுவதும் பரவி நிமோனியா, மூளை அழற்சி (encephalitis) போன்ற சிக்கல்களை ஏற்படுத்தலாம்; கடுமையான சூழலில் மரணத்தையும் விளைவிக்கலாம்.
- பரவும் விதம்: நோய்த்தொற்று உள்ளவர்கள் இருமும்போதோ அல்லது தும்மும்போதோ வெளிப்படும் நீர்த்திவலைகள் மூலமாகவோ (மூக்கு அல்லது தொண்டை சுரப்புகள்), அசுத்தமான காற்றை சுவாசிப்பதன் மூலமாகவோ இந்நோய் பரவுகிறது. இந்த வைரஸ் காற்றில் அல்லது மேற்பரப்புகளில் இரண்டு மணிநேரம் வரை உயிருடன் இருக்கக் கூடியது, இதனால் நெரிசலான இடங்களில் இது மிக எளிதாகப் பரவுகிறது.
Important Days in April 2026 Tamil :
உலக சுகாதார தினம் (World Health Day)
- உலக சுகாதார தினம் (World Health Day) ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7 அன்று கொண்டாடப்படுகிறது. 1948-ல் உலக சுகாதார நிறுவனம் (WHO) நிறுவப்பட்டதை நினைவுகூரும் வகையில், 1950 முதல் இந்நாள் உலகளாவிய ஆரோக்கிய விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்படுகிறது. நோக்கம்: உலகளாவிய சுகாதாரப் பிரச்சினைகள், விழிப்புணர்வு, மற்றும் அனைவருக்கும் தரமான மருத்துவ வசதிகளை வலியுறுத்துதல்.
- பின்னணி: ஏப்ரல் 7, 1948-ல் [WHO] (உலக சுகாதார அமைப்பு) நிறுவப்பட்டது.
- செயல்பாடுகள்: ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட சுகாதாரத் தீம் (Theme) தேர்வு செய்யப்பட்டு, உலகெங்கிலும் பிரச்சாரங்கள் மற்றும் சுகாதார பரிசோதனை முகாம்கள் நடத்தப்படுகின்றன.
- முக்கியத்துவம்: ஒவ்வொரு நபரின் உடல்நலம், மனநலம், மற்றும் சுத்தமான சூழல், தரமான மருத்துவ சிகிச்சை பெறுவதற்கான உரிமையை முன்னிறுத்துகிறது.
- 2026-ன் கருப்பொருள்:
- “ஆரோக்கியத்திற்காக ஒன்றிணைவோம்; அறிவியலுடன் நிற்போம்” - இது அறிவியல் சார்ந்த மருத்துவத்தின் முக்கியத்துவத்தையும், சமூக ஒற்றுமையையும் வலியுறுத்துகிறது.
Sports & Records | விளையாட்டு மற்றும் சாதனைகள் :
ISSF உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியாவின் பாலக் மற்றும் முகேஷ் ஜோடிக்கு தங்கம்
- சாதனை: ஸ்பெயின் நாட்டின் கிரனாடாவில் (Granada) நடைபெறும் ISSF உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் (ரைஃபிள் மற்றும் பிஸ்டல் பிரிவு), 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் இளம் வீரர்களான பாலக் மற்றும் முகேஷ் நெலவல்லி ஜோடி தங்கப் பதக்கம் வென்றுள்ளனர்.
- உலக சாதனை: இறுதிப் போட்டியில் இந்த இந்திய ஜோடி 487.7 புள்ளிகள் குவித்து புதிய உலக சாதனையை (ஜூனியர் உலக சாதனை) படைத்துள்ளது. இதில் பாலக் 243.0 புள்ளிகளும், முகேஷ் 244.7 புள்ளிகளும் எடுத்தனர்.
- மற்ற பதக்கங்கள்: சீனாவின் கியான்சுன் யாவோ மற்றும் காய் ஹூ ஜோடி 484.8 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், ஹங்கேரியின் வெரோனிகா மேஜர் மற்றும் அகோஸ் கரோலி நாகி ஜோடி 414.9 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
- தகுதிச்சுற்று: முன்னதாக நடைபெற்ற தகுதிச்சுற்றுப் போட்டியில், சீன ஜோடி (586-23x) முதலிடத்திலும், இந்திய ஜோடி 581-17x புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் இருந்தனர்.
- வீரர்கள் பற்றிய தகவல்: 18 வயதான பாலக், 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தனிநபர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கமும், அணிப்பிரிவில் வெள்ளியும் வென்றவர். இவர் பாரிஸ் ஒலிம்பிக் 2024-க்கும் தகுதி பெற்றுள்ளார். முகேஷ் நெலவல்லி ஏற்கனவே ஜூனியர் உலக சாம்பியன் பட்டம் வென்றவர் ஆவார்.
TNPSC Current Affairs Quiz: APRIL 2026 - (05.04.2026 TO 08.04.2026) :
- படித்தது போதும்! உங்கள் அறிவை சோதிக்க இந்த வினாடி வினாவை முயற்சிக்கவும்:
- Test your knowledge: TNPSC CURRENT AFFAIRS QUIZ: APRIL 2026 - (05.04.2026 TO 08.04.2026) (TAMIL & ENGLISH)
DOWNLOAD PDF : TNPSC CURRENT AFFAIRS IN TAMIL APRIL 2026 :
TNPSC Current Affairs in Tamil: April 2026 (1st WEEK ) | PDF Download & Key Notes
மேலும் படிக்க:
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSC PAYILAGAM and happy learning!
Download Daily TNPSC current affairs PDF in Tamil for 05 to 08 APRIL 2026 for TNPSC Group 1, 2, & 4 exams.
tnpsc-current-affairs-in-tamil-april-05-08-2026


