இந்தியாவின் தேசிய பாதுகாப்பு கட்டமைப்பில் ஒரு முக்கிய மைல்கல்லாக, மத்திய உள்துறை அமைச்சகம் ‘பிரஹார்’ (PRAHAAR) என்ற புதிய 'தேசிய தீவிரவாத எதிர்ப்பு கொள்கையை' (National Counter Terrorism Policy) சமீபத்தில் வெளியிட்டுள்ளது. தேசப் பாதுகாப்பை உறுதி செய்யவும், பயங்கரவாத அச்சுறுத்தல்களை வேரறுக்கவும் உருவாக்கப்பட்ட இந்த புதிய கொள்கையின் முக்கிய அம்சங்களை இந்தப் பதிவில் விரிவாகக் காண்போம்.
மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் 'தேசிய தீவிரவாத எதிர்ப்பு கொள்கை' வெளியீடு : பிரஹார் (PRAHAAR)
- புதிய கொள்கை: தீவிரவாதத்திற்கு எதிராகச் செயல்படும் வகையில், மத்திய உள்துறை அமைச்சகம் 'பிரஹார்' (PRAHAAR) என்ற புதிய 'தேசிய தீவிரவாத எதிர்ப்பு கொள்கையை' (National Counter Terrorism Policy) வெளியிட்டுள்ளது.
- பின்னணி: சில அண்டை நாடுகள் தீவிரவாதத்தை தங்களின் கொள்கையாகவே கடைப்பிடித்து வருவதால் இந்தியா பாதிக்கப்படுகிறது. இதனை முறியடிக்கும் விதமாக இந்த கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
'PRAHAAR' என்பதன் விரிவாக்கம் மற்றும் 7 முக்கியத் தூண்கள்:
- P (Prevention): இந்தியக் குடிமக்கள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதற்கான பயங்கரவாதத் தாக்குதல் தடுப்பு நடவடிக்கைகள்.
- R (Responses): அச்சுறுத்தல்களுக்கு ஏற்ப விரைவான மற்றும் விகிதாசார பதிலடி கொடுப்பது.
- A (Aggregating): அரசின் அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து உள்நாட்டுத் திறன்களை மேம்படுத்துதல்.
- H (Human Rights): அச்சுறுத்தல்களைக் குறைக்கும்போது மனித உரிமைகள் மற்றும் 'சட்டத்தின் ஆட்சி'யைப் பின்பற்றுதல்.
- A (Attenuating): தீவிரமயமாக்கல் உள்ளிட்ட பயங்கரவாதத்திற்குச் சாதகமான சூழல்களைக் களைதல்.
- A (Aligning): பயங்கரவாதத்தை எதிர்க்க சர்வதேச முயற்சிகளுடன் இணைந்து செயல்படுதல்.
- R (Recovery): சமூகத்தின் ஒட்டுமொத்த ஒத்துழைப்புடன் மீட்சி மற்றும் பின்னடைவைத் தாங்கும் திறனை வளர்த்தல்.
கொள்கையின் முக்கிய அம்சங்கள்:
- முன்கூட்டிய தடுப்பு & அதிவிரைவுப் பதிலடி: தீவிரவாதத் தாக்குதல்களை முன்கூட்டியே தடுத்து மக்களைப் பாதுகாக்கவும், மீறித் தாக்குதல் நடந்தால் அதற்கு மிக விரைவாகப் பதிலடி கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- ஒருங்கிணைந்த செயல்பாடு: தீவிரவாதத்திற்கு எதிராக அரசின் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படும். மேலும், உலக நாடுகளுடனும் இந்தியா இணைந்து செயல்படும்.
- பாதிக்கப்பட்டோருக்கு உதவி: தீவிரவாத அச்சுறுத்தல்களால் பாதிக்கப்படும் மக்களுக்குத் தேவையான மனிதாபிமான மற்றும் சட்ட உதவிகள் வழங்கப்படும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரைந்து மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
- தீவிரவாதத்தை வேரறுத்தல்: நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் தீவிரவாதம் முற்றிலும் வேரறுக்கப்படும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அச்சுறுத்தல்களும் நடவடிக்கைகளும்:
- அல்-காய்தா, ஐ.எஸ் போன்ற தீவிரவாத அமைப்புகளால் இந்தியாவுக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்து வருகிறது.
- சில அண்டை நாடுகளின் துணையோடு, அந்நிய மண்ணில் பதுங்கியுள்ள தீவிரவாதிகள் இந்தியாவுக்கு எதிரான நாசவேலைகளில் ஈடுபடுகின்றனர்.
- அண்டை நாடுகளிலிருந்து ட்ரோன்கள் (Drones) மூலம் தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் விநியோகிக்கப்படுவதைத் தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இந்தக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது.

