வானிலை தொடர்பான பிரித்வி விக்யான் (பிரித்வி) திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்:
வளிமண்டலம், கடல், புவிக்கோளம் ஆகியவற்றின் தன்மைகளை கண்காணித்து முக்கிய அம்சங்களைப் பதிவு செய்தல்.
இதன் ஆராய்ச்சி - மேம்பாட்டை மேற்கொள்ளத் தேவையான உள்கட்டமைப்பை உருவாக்குதல்.
வானிலை, கடல், பருவநிலை ஆபத்துகளை கண்டறிய மாதிரி அமைப்புகளை உருவாக்குதல்.
நிலநடுக்கங்களைக் கண்காணித்து நில அதிர்வு அபாய மதிப்பீட்டை மேற்கொள்ளுதல்
புதிய வளங்களைக் கண்டுபிடிப்பதற்காக பூமியின் துருவ, உயர் கடல் பகுதிகளை ஆராய்தல்.
சமூக பயன்பாடுகளுக்காக கடல் வளங்களை ஆராய்வதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்குதல்.
புவி அறிவியலில் திறமையான, பயிற்சி பெற்ற மனிதவளத்தை உருவாக்குதல்.
பிரித்வி திட்டத்தின் கீழ், பல்வேறு புவியியல் சூழல்களில் கண்காணிப்பு அமைப்புகளையும், எச்சரிக்கை சேவைகளையும் வலுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடையப்பட்டுள்ளது.
கண்காணிப்பு வலையமைப்புகள்
டாப்ளர் வானிலை ரேடார் கட்டமைப்பு 47 ஆக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. உலகளாவிய பருவநிலை கண்காணிப்பு அமைப்பு, மேல் பகுதி காற்று கட்டமைப்பு ஆய்வு நிலையங்கள் 6-லிருந்து 12 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.
400 தானியங்கி வானிலை நிலையங்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் கிழக்கு, மேற்கு கடற்கரைப் பகுதிகளில் உள்ள அதிவேக காற்று வேக பதிவு மையங்கள் 37 ஆக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் பரந்த கடற்கரையோரத்தில் வசிக்கும் அனைத்து கடலோர மக்களுக்கும் சுனாமி, உயர் அலை எச்சரிக்கைகள், புயல், எண்ணெய் கசிவுகள், ஹில்சா மீன்வள ஆலோசனை சேவை, தீங்கு விளைவிக்கும் பாசிப் பூக்கள் போன்றவை குறித்து மேம்பட்ட எச்சரிக்கை சேவைகள் வழங்கப்படுகின்றன.
துல்லியமான முன்னறிவிப்பு:
'பாரத் எஃப்.எஸ்' (Bharat FS) உள்ளிட்ட உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட உயர் துல்லியமான மாதிரிகள் மூலம் வானிலை முன்னறிவிப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.
கனமழை, வெப்ப அலைகள், புயல் மற்றும் மின்னல் குறித்த முன்னறிவிப்புகளின் துல்லியம் 40% முதல் 85% வரை அதிகரித்துள்ளது.
புயல்களின் பாதை மற்றும் கரையை கடக்கும் இடத்தைக் கணிப்பதில் துல்லியம் மேம்பட்டுள்ளது.
நிதி விவரம்:
2024-25 நிதியாண்டில் இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட ரூ.685.00 கோடியில், ரூ.663.82 கோடி செலவிடப்பட்டுள்ளது. வளிமண்டலம் மற்றும் காலநிலை ஆராய்ச்சி (ACROSS) மற்றும் கடல்சார் சேவைகள் (OSMART) போன்ற துணைத் திட்டங்களின் கீழ் பல்வேறு இலக்குகள் எட்டப்பட்டுள்ளன.