- பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் விவசாயம், அரசு வேலை, தனியார் நிறுவனங்களில் வேலை செய்தல் என்ற அளவிலேயே இருப்பதை மாற்றி தொழில்முனைவோர்களாக உருவாகவும், பலருக்கு வேலை வாய்ப்பை அளிக்கவும், அச்சமுதாய மக்கள் ஒருங்கிணைந்து முன்னேற்ற பாதையில் செல்லவும் இந்திய அளவில் முதன்மையான திட்டமாக அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் தமிழ்நாடு அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையால் (Department of Micro, Small and Medium Enterprises) கடந்த 2023-24 நிதியாண்டில் தொடங்கப்பட்டது.
திட்டத்தின் சிறப்பம்சங்கள் :
- தகுதியுள்ள திட்டத்தொகையில் 35 % மூலதன மானியம் (உச்சவரம்பு ரூ. 1.5 கோடி)
- திட்டத்தொகை நிலம், கட்டடம், இயந்திர தளவாடங்கள் மற்றும் கருவிகள், ஆய்வு மற்றும் மதிப்பீட்டுக் கருவிகள், கணினி ஆகியவற்றின் விலை மதிப்பை உள்ளடக்கியது. நிலமதிப்பு மொத்த திட்டத் தொகையில் 20% ஐ மிகலாகாது. கட்டிட மதிப்பு மொத்த திட்டத்தொகையில் 25 %க்குள் இருக்க வேண்டும். ஒரு செயல்பாட்டுச் சுழற்சிக்குத் (One Operating cycle) தேவைப்படும் நடைமுறை மூலதனமும், மொத்த இயந்திர தளவாடங்கள் / கருவிகள் மதிப்பில் 25% என்ற வரம்புக்குட்பட்டு திட்டத் தொகையாகக் கணக்கில் கொள்ளப்படும். திட்டச் செயல்பாடுகளுடன் ஒருங்கிணைந்த பகுதியாக அமையும் வாகனங்களின் மதிப்பும் கணக்கில் கொள்ளப்படும்.
- இயந்திர தளவாடங்கள் / கருவிகள் வாங்கப் பெறப்பட்ட பருவக் கடனுக்கு, கடனைத் திரும்பச் செலுத்தும் காலம் முழுதும் (அதிகபட்சம் 10 ஆண்டுகள்) 6% வட்டி மானியம். வட்டி மானியம் முன்கூட்டியே வங்கிகளுக்கு பட்டுவாடா செய்யப்படும்.
- நடைமுறை மூலதனத்துக்காகப் பெறப்பட்ட கடனுக்கு அதிகபட்சம் 2 ஆண்டுகள் வரை வட்டி மானியம்.
- இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்றவர்கள் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லாத பிற அரசு / அரசல்லாத நிறுவனங்களில் மானியம் பெறத் தடையில்லை.
- பட்டியல் வகுப்பு / பட்டியல் பழங்குடி இனத் தனிநபர்கள், முழுமையாகப் பட்டியல் வகுப்பு / பட்டியல் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களால் உடைமை கொண்ட நிறுவனங்கள் மட்டுமே பயன்பெற இயலும்.
- புதிய நிறுவனங்கள் மற்றும் இயங்கும் நிறுவனங்களின் விரிவாக்க முனைப்புகளுக்கு உதவி கோரலாம்.
- வேலைவாய்ப்பற்ற இளைஞர் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்தின் கீழான திட்டத்தொகை வரம்புக்கு மேற்பட்ட வாணிக / விற்பனைத் தொழில் திட்டங்கள் பயன்பெறலாம்.
- பயனாளிகளுக்கான உச்ச வயது வரம்பு 55
- குறைந்தபட்ச கல்வித் தகுதி ஏதுமில்லை.