CURRENT AFFAIRS IN TAMIL JUNE 2025 (20.06.2025-21.06.2025)

TNPSC PAYILAGAM
By -
0

CURRENT AFFAIRS IN TAMIL JUNE 2025 (20.06.2025-21.06.2025)


நாட்டின் உற்பத்தியில் தமிழக பங்களிப்பு 11.90 சதவீதம்: முதல்வர் ஸ்டாலின்

  • அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் (ஐமா) சார்பில் 16-வது சர்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சியான ‘ஆக்மி 2025’ சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தொடங்கியது. 30 ஆயிரம் சதுரஅடி பரப்பளவுக்கு கண்காட்சி அமைக்கப்பட்டு 500-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அவர் பேசியதாவது:
  • நாட்டின் மொத்த உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு 11.90 சதவீதம். அதில் குறிப்பிடும்படியாக, இந்திய அளவில் 35 லட்சத்துக்கும் மேற்பட்ட பதிவுசெய்யப்பட்ட குறு, சிறு, நடுத்தர (எம்எஸ்எம்இ) தொழில் நிறுவனங்களில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. இதன்மூலம் 2.47 கோடி பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. 14 தொழிற்பேட்டைகள் உருவாகியுள்ளன.
  • மோட்டார் வாகன உற்பத்தி, ஆயத்த ஆடைகள், தோல் பொருட்கள் உற்பத்தியில் முதல் இடத்தையும், ஜவுளி இயந்திரங்கள், மின்னணு பொருட்கள் உற்பத்தியில் 2-ம் இடத்தையும் தமிழகம் பிடித்துள்ளது.
  • நாட்டில் உள்ள பதிவு செய்யப்பட்ட 14.90 லட்சம் பெண் தொழிலாளர்களில் 6.30 லட்சம் பேர் (42 சதவீதம்), தமிழகத்தில் இருக்கும் தொழிற்சாலைகளில் பணிபுரிகின்றனர்
  • கடந்த 2024-25-ம் ஆண்டில் 30.50 பில்லியன் டாலர் மதிப்புக்கு ஏற்றுமதி செய்து, இந்திய அளவில் தமிழகம் 3-ம் இடம் பிடித்துள்ளது. சுய வேலைவாய்ப்பு திட்டங்களின்கீழ் கடந்த 4 ஆண்டுகளில் 59,915 புதிய தொழில் முனைவோருக்கு ரூ.2,031 கோடி மானியத்துடன் ரூ.5,210 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
  • கடன் உத்தரவாத திட்டம் மூலம் 42,278 எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு ரூ.7,578.53 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஆண்டில் இத்துறைக்கு ரூ.1918.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முந்தைய 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ரூ.3617.62 கோடிதான் ஒதுக்கப்பட்டது. ஆனால், திமுக பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் எம்எஸ்எம்இ துறைக்கு இதுவரை ரூ.6,626 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் தொழில் துறை மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. இவ்வாறு முதல்வர் பேசினார்.


ராக்கெட் தயாரிப்பு ஏலத்தில் எச்ஏஎல் வெற்றி:

  • இந்தியாவின் சிறிய செயற்கைக்கோள் ஏவுதள ராக்கெட்டுகளை தனிப்பட்ட முறையில் தயாரிப்பதற்கான ஏலத்தை எச்ஏஎல் வென்றுள்ளது. வேகமாக வளர்ந்து வரும் விண்வெளி துறையில் நிறுவனங்களின் பங்களிப்பை விரிவுபடுத்தும் அரசின் முயற்சிக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றியாக இது கருதப்படுகிறது.
  • அதானி டிபென்ஸ் சிஸ்டம்ஸ் அண்ட் டெக்னாலஜிஸின் ஒரு பிரிவான ஆல்பா டிசைன் டெக்னாலஜி, பாரத் டைனமிக்ஸ், எச்ஏஎல் ஆகியவை இறுதி ஏலத்துக்கு தகுதிபெற்றிருந்த நிலையில், எச்ஏஎல் எஸ்எஸ்எல்வி தொழில்நுட்பத்தை பெறுவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளது.
  • பூமியின் கீழ் சுற்றுப்பாதையில் 500 கிலோ எடையுள்ள பொருட்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட செயற்கைகோளை ஏவுவதற்கான ராக்கெட்டை உருவாக்கும் முயற்சியில் வெற்றி பெறுவதன் மூலம் எச்ஏஎல் சுயாதீனமாக எஸ்எஸ்எல்வி ஏவுதல்களை உருவாக்க, சொந்தமாக வைத்திருக்க மற்றும் வணிகமயமாக்கும் திறன்களைப் பெறமுடியும்.

தொலைத்தொடர்புத் துறை தொழில்நுட்ப மேம்பாட்டுக்காக 120 ஆராய்ச்சி திட்டங்களுக்கு ரூ.500 கோடிக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக மத்திய தொலைத்தொடர்புத் துறை செயலர் நீரஜ் மிட்டல் தெரிவித்தார்:

  • தொலைத்தொடர்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி திட்டமானது கடந்த 2022-ம் ஆண்டு மத்திய தொலைத்தொடர்பு துறையால் கொண்டுவரப்பட்ட ஒரு முன்னோடி திட்டம் ஆகும். இது, தொலைத்தொடர்புத் துறையில் உள்நாட்டு ஆராய்ச்சி பணிகளை ஊக்குவிப்பதுடன் கல்வி நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள் (ஸ்டார்ட்-அப்), ஆராய்ச்சி நிறுவனங்கள், தொழில்துறையினர் மேற்கொள்ளும் ஆராய்ச்சி திட்டங்களுக்கு பல்வேறு நிலைகளில் ஆதரவு அளித்து வருகிறது.
  • இத்திட்டத்தின் கீழ் 120 ஆராய்ச்சித் திட்டங்களுக்கு ரூ.500 கோடிக்கு நிதியுதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதில் இந்தியா சார்ந்த 5ஜி தொழில்நுட்பம், ட்ரோன் சார்ந்த முக அடையாளம் காணும் தொழில்நுட்பம், குவாண்டம் சார்ந்த தொலைத்தொடர்பு முறை போன்றவை தொடர்பான ஆய்வுகள் முக்கியமானவை.

2024-25-ம் ஆண்டுக்கான டிஜிட்டல் பேமெண்ட்ஸ் விருது:

  • மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும்  அஞ்சல் துறைக்கு சொந்தமான இந்திய அஞ்சலக பேமெண்ட்ஸ் வங்கி நாடு முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் நிதிசார் உள்ளடக்கத்தை விரிவுபடுத்துவதில் ஆற்றிய சிறப்பான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் நிதி அமைச்சகத்தின் நிதிசார் சேவைகள் துறையால்  2024-25-ம் ஆண்டுக்கான டிஜிட்டல் பேமெண்ட்ஸ் விருது  வழங்கப்படுகிறது.
  • 2024–25-ம் நிதியாண்டிற்கான செயல்திறன் குறியீட்டில் நாட்டில் உள்ள பேமெண்ட்ஸ் வங்கிகளில் இந்திய அஞ்சலக பேமெண்ட்ஸ் வங்கி  முதல் இடத்தைப் பிடித்து  இந்த விருதைப் பெற்றுள்ளது.

  • இந்த வங்கியின் சிறப்பான செயல்பாடுகள் மற்றும் காகிதப் பயன்பாடற்ற டிஜிட்டல் முறையிலான சேவைகளை எளிதாகவும் பாதுகாப்பான முறையிலும் செயல்படுத்தும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. 
  • நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மக்களுக்கான  வங்கிச் சேவைகளை  எளிதாக்குவதில் இந்த வங்கி கூடுதல்  கவனம் செலுத்தி வருகிறது. இந்த வங்கியின் நிதிசார் சேவைகள் 13 இந்திய மொழிகளில் வழங்கப்பட்டு வருகிறது. இதன்  மூலம் நாட்டில் உள்ள 5.57 லட்சம் கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் 11 கோடி வாடிக்கையாளர்களுக்கு குறைந்த செலவில் வங்கிச் சேவைகளை வழங்குகிறது.


14-வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை தொடர் :

  • சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் 14-வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை தொடர் வரும் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை சென்னை மற்றும் மதுரையில் நடைபெற உள்ளது. இதில் போட்டியை நடத்தும் இந்தியா உள்ளிட்ட 24 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த அணிகள் எந்தெந்த பிரிவிலும் கலந்து கொள்ளும் என்பதற்கான ‘டிரா’ வெளியீடு வரும் 24-ம் தேதி சுவிட்சர்லாந்தில் நடைபெற உள்ளது.
  • ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை தொடரை இந்தியா நடத்துவது இது 3-வது முறையாகும். இதற்கு முன்னர் 2016-ல் லக்னோவிலும், 2021-ல் புவனேஷ்வரிலும் நடைபெற்றிருந்தது. இம்முறை அணிகளின் எண்ணிக்கை 16-ல் இருந்து 24 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த உலகக் கோப்பை தொடரை நடத்துவதற்காக தமிழக அரசு ரூ.64 கோடியை ஒதுக்கியுள்ளது.
  • இந்நிலையில் இந்தத் தொடருக்கான இலட்சினை (லோகோ) வெளியிடும் நிகழ்ச்சி  சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் போட்டியின் அதிகாரப்பூர்வ இலட்சினையை வெளியிட்டார். நிகழ்ச்சியில் ஹாக்கி இந்தியா பொதுச் செயலாளர் போலா நாத் சிங் உள்ளிட்ட நிர்வாகிகளும், ஏஸ்டிஏடி அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

11-வது சர்வதேச யோகா தினம்:

  • ஐ.நா சபையில் கடந்த 2014-ம் ஆண்டு உரையாற்றிய பிரதமர் மோடி, யோகாவின் நன்மைகளையும் பெருமையையும் எடுத்துக்கூறினார். அதனை சர்வதேச தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என அப்போது அவர் பரிந்துரைத்தார். இதற்கு 177 உறுப்பு நாடுகள் ஆதரவு அளித்தன. இதனை தொடர்ந்து, 2015-ம் ஆண்டு முதல் ஜூன் 21-ந்தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. சபை அறிவித்தது. 
  • இந்நிலையில் 11-வது சர்வதேச யோகா தினம் 21.06.2025 கொண்டாப்படுகிறது. 'ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்' என்ற கருப்பொருளில், உலகில் உள்ள 191 நாடுகளில் யோகா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தின் ஆர்.கே.கடற்கரையில், பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு யோகா செய்தனர்.
  • இதனிடையே, யோகா தினத்தை முன்னிட்டு புதிய உலக சாதனையை படைக்கும் முயற்சியில் ஆந்திராவை ஆளும் தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஈடுபட்டுள்ளது. இதன்படி விசாகப்பட்டினத்தில் நடைபெறும் யோகா தின நிகழ்ச்சியில் 5 லட்சம் பேரை பங்கேற்க வைத்து கின்னஸ் சாதனை படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக குஜராத் மாநிலம் சூரத்தில் கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் 1.47 லட்சம் பேர் பங்கேற்றதே இதுவரையிலான அதிகபட்ச சாதனையாக இருந்து வருகிறது. அந்த சாதனையை முறியடிக்கும் முயற்சியில் ஆந்திர அரசு ஈடுபட்டுள்ளது. 
  • அதே சமயம், ஆந்திராவில் ஒரே நாளில் சுமார் 1 லட்சம் இடங்களில் யோகா நிகழ்ச்சிகளை நடத்தி, அவற்றில் சுமார் 2 கோடி மக்களை பங்கேற்க வைத்து புதிய சாதனை படைக்கும் முயற்சியையும் ஆந்திர அரசு மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

உலக அரிவாள் செல் விழிப்புணர்வு தினம்:

  • ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 19 ஆம் தேதி உலக அரிவாள் செல் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில், அரிவாள் செல் ரத்த சோகை நோய்  பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கமாகும். 
  • இந்த ஆண்டுக்கான கருப்பொருள், 'உலகளாவிய நடவடிக்கை, உள்ளூர் தாக்கம்:  செயல்திறன்மிக்க சுய-ஆதரவுக்கு சமூகங்களை மேம்படுத்துதல்' என்பதாகும்.
  • அரிவாள் செல் நோய் என்பது ஒரு நாள்பட்ட, பரம்பரை ரத்த சோகை கோளாறாகும்.  இது பொதுவாக பழங்குடி மக்களிடையே காணப்படுகிறது, இது உலகளவில் கோடிக்கணக்கான மக்களைப் பாதிக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரம்பகால நோயறிதல், பயனுள்ள சிகிச்சை மற்றும் ஆதரவான சமூக சூழல்களை உருவாக்குவதற்கான உலகளாவிய முயற்சிகளை வலுப்படுத்துகிறது.




OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :


FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!

current-affairs-in-tamil-20th-21st-june-2025

Post a Comment

0Comments

Post a Comment (0)