- உலகப் பொருளாதார மன்றத்தின் உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை 2025-ன்படி, ஆண்-பெண் பாலின இடைவெளியில் 146 நாடுகளில் இந்தியா 131-வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு இரண்டு இடங்கள் பின்தங்கியுள்ளது.
- உலகப் பொருளாதார மன்றத்தின் உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை 2025 தற்போது வெளியாகி உள்ளது. 146 நாடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
- அதில், இந்தியா 131-வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு இந்தியா 129-வது இடத்தைப் பெற்றிருந்த நிலையில், தற்போது இரண்டு இடங்கள் பின்தங்கியுள்ளது. இந்தியாவின் சமநிலை மதிப்பெண் 64.1 சதவீதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தரவரிசையில் தெற்காசியாவின் மிகக் குறைந்த தரவரிசை கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
- பாலின இடைவெளி குறியீடு நான்கு முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு பாலின சமத்துவம் அளவிடுகிறது. ஒன்று, பொருளாதார பங்கேற்பு மற்றும் வாய்ப்பு, இரண்டு, கல்வி மூன்று, சுகாதாரம் மற்றும் உயிர்வாழ்வு, நான்கு, அரசியல் அதிகாரமளித்தல்.
- இந்த அறிக்கையின்படி, இந்தியப் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த செயல்திறன் +0.3 புள்ளிகள் மேம்பட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதார பங்கேற்பு மற்றும் வாய்ப்பு +.9 சதவீத புள்ளிகள் அதிகரித்து 40.7 சதவீதமாக உள்ளது.
- கல்வியில், இந்தியா 97.1 சதவீத மதிப்பெண்களைப் பெற்றுள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது. இது எழுத்தறிவு மற்றும் உயர்கல்வி சேர்க்கைக்கான பெண்களின் பங்குகளில் நேர்மறையான மாற்றங்களை பிரதிபலிக்கிறது.
- சுகாதாரம் மற்றும் உயிர்வாழ்வு விஷயத்தில், மற்ற நாடுகளைப் போலவே, இந்தியாவிலும் ஆண்கள் மற்றும் பெண்களின் ஆயுட்காலம் ஒட்டுமொத்தமாகக் குறைந்துள்ளது என்றும், எனினும், ஆரோக்கியமான ஆயுட்காலத்தில் ஆண் - பெண் இடையே சமத்துவம் நிலவுகிறது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அரசியல் அதிகாரமளித்தல் விவகாரத்தில், இந்தியா சமத்துவத்தில் -0.6 புள்ளிகள் சரிவை சந்தித்துள்ளது. நாடாளுமன்றத்தில் பெண் பிரதிநிதித்துவம் 2025 இல் 14.7 சதவீதத்திலிருந்து 13.8 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதேபோல், அமைச்சர் பதவிகளில் பெண்களின் பங்கு 6.5 சதவீதத்திலிருந்து 5.6 சதவீதமாகக் குறைந்துள்ளது.
- அரசியல் அதிகாரமளித்தல் மற்றும் பொருளாதார பங்கேற்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுடன், தெற்காசியாவில் சிறந்த செயல்திறன் கொண்ட நாடாக வங்கதேசம் உருவெடுத்துள்ளது. உலகளவில் 75 இடங்கள் முன்னேறி 24வது இடத்தை வங்கதேசம் பிடித்துள்ளது. நேபாளம் 125-வது இடத்திலும், இலங்கை 130-வது இடத்திலும், பூட்டான் 119-வது இடத்திலும், மாலத்தீவுகள் 138-வது இடத்திலும், பாகிஸ்தான் 148-வது இடத்திலும் உள்ளன.
- உலகளாவிய பாலின இடைவெளி 68.8 சதவீதமாக குறைந்துள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது. ஐஸ்லாந்து தொடர்ந்து 16-வது ஆண்டாக தரவரிசையில் முன்னணியில் உள்ளது, அதைத் தொடர்ந்து பின்லாந்து, நார்வே, யுனைடெட் கிங்டம் மற்றும் நியூசிலாந்து உள்ளன.
- உலகளாவிய பணியாளர்களில் 41.2 சதவீதத்தை பெண்கள் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். இருந்தபோதிலும், உயர் தலைமைப் பதவிகளில் பெண்கள் 28.8 சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ளனர் என அறிக்கை தெரிவிக்கிறது.
நன்றி : இந்து தமிழ் திசை (12.06.2025)