T.N. LISTS ACHIEVEMENTS OF RURAL DEVELOPMENT DEPARTMENT (2021 -2025)

TNPSC PAYILAGAM
By -
0

T.N. LISTS ACHIEVEMENTS OF RURAL DEVELOPMENT DEPARTMENT (2021 -2025)


4 ஆண்டுகளில் மட்டும் ஊரக வளர்ச்சி துறையில் ரூ.19,000 கோடி திட்டங்கள்: தமிழக அரசு :

ஊரக வளர்ச்சித் துறையில் 4 ஆண்டுகளில் ரூ.19,024 கோடியில் செயல்படுத்தப்படும் பல்வேறு முன்னோடி திட்டங்கள் நாட்டின் பிற மாநிலங்களுக்கும் வழிகாட்டுவதாக தமிழக அரசு  தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 

  • தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் சுயமாகச் செயல்படவும், மேலிட அனுமதிகளைப் பெறுவதில் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்க்கவும் கிராம ஊராட்சிகளுக்கு நிர்வாக அனுமதி அளிக்கும் வரம்பு ரூ.2 லட்சம் என்பதை ரூ.5 லட்சம் ஆகவும் வட்டார ஊராட்சிக்கான அனுமதி வரம்பு ரூ.10 லட்சம் என்பது ரூ.20 லட்சம் ஆகவும் மாவட்ட ஊராட்சிகளுக்கு ரூ.20 லட்சம் என்பதை ரூ.50 லட்சம் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
  • இதுதவிர, நகரங்களை ஒட்டிய 690 ஊராட்சிகளுக்கு தலா ரூ.10 லட்சம், 278 மலைப்புற ஊராட்சிகளுக்கு ரூ.30 கோடியும் அடிப்படை வசதிகளை மேம்படுத்திட சிறப்பு மானியம் வழங்கப்பட்டுள்ளது. ஊராட்சிகளின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும், பிற துறைகளுடன் ஊராட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படவும் 600 கிராமச் செயலகங்கள் கட்டப்ட்டுள்ளன.
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் திட்டத்தில் இந்திய அளவில் மனித சக்தி நாட்கள் உருவாக்குவதில் தமிழகத்தின் செயல்திறனானது ஒவ்வொரு ஆண்டும் எதிர்பார்ப்புகளைவிட மிக அதிகமாக உள்ளது. 2021- 22 முதல் 2024-25 ம் ஆண்டு வரை சராசரியாக 66.91 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 77.37 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கியதன் மூலம் தேசிய அளவில் தமிழகம் பாராட்டப்படுகிறது.
  • அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் – 2 மூலம், 2021-22 முதல் 2024-25 வரை 10,187 கிராம ஊராட்சிகளில் 69,760 பணிகள் ரூ.4,277.32 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் 7,924 நூலகங்கள் ரூ.176.02 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளன. ஊரகப் பகுதிகளில் 5,000 சிறு பாசன ஏரிகள் ரூ.500 கோடியில் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.
  • சாலைத் திட்டங்கள்:  முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தில், ரூ.8,000 கோடி செலவில் 20,000 கி.மீ. கிராமப்புற சாலைகளை மேம்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி கிராமச் சாலைகள் திட்டத்தில் 4,182 கி.மீ. நீளமுள்ள 947 சாலைப்பணிகளும் 83 புதிய பாலங்களும் ரூ.3,061 கோடி மதிப்பீட்டில் எடுக்கப்பட்டுள்ளன. நபார்டு நிதி மூலம் 505 கி.மீ. நீளமுள்ள 283 சாலைகள் மற்றும் 308 பாலங்கள் ரூ.1,182 கோடியில் கட்டப்பட்டுள்ளன. மாநில சிறப்பு நிதியின்கீழ் 34 உயர்மட்டப் பாலங்கள் 18 மாவட்டங்களில் ரூ.177.85 கோடியில் கட்டப்பட்டு வருகின்றன.
  • கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்படி 2024-25 மற்றும் 2025-26 ஆகிய 2 ஆண்டுகளில் 2 இலட்சம் வீடுகள் கட்ட ரூ.7,000 கோடி அனுமதிக்கப்பட்டு 72,081 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. முதல்வரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டத்தின்கீழ் 15,485 வீடுகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.261 கோடியில் பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. பிரதம மந்திரியின் ஊரகக் குடியிருப்புத் திட்டத்தின்கீழ் 3,53,141 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
  • நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகளில், ரூ.984 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 9,826 பணிகள் ரூ.863.01 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டன. 4 ஆண்டுகளில் 3 லட்சத்து 38,357 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. 2021-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளில் இதுவரை 1 கோடியே 11 லட்சத்து 45,898 வீடுகளுக்கு குடிநீர்க் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
  • இவ்வாறான பல்வேறு திட்டங்களால் தமிழகத்தின் கிராமப்புறங்கள், நகர்ப்புறங்களுக்கு இணையாக வளர்ச்சி பெற்று இந்திய மாநிலங்களுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


SOURCE : இந்து தமிழ் திசை -29.06.2025 







Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)