UNGALUDAN STALIN SCHEME / உங்​களு​டன் ஸ்டா​லின் திட்​டம்

TNPSC PAYILAGAM
By -
0

UNGALUDAN STALIN SCHEME


  • அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்களை மக்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை சிதம்பரத்தில் முதல்வர் ஸ்டாலின் ஜூலை 15-ம் தேதி தொடங்கி வைக்கிறார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற விடுபட்டவர்கள் இதில் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் திட்டம் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற, ஊரக பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டம் தொடங்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும், அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவதுதான் இதன் நோக்கம்.
  • இத்திட்டத்தின்கீழ் நகர்ப்புறங்களில் 3,768 முகாம்கள், ஊரகப் பகுதிகளில் 6,232 முகாம்கள் என 10 ஆயிரம் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இதில் முதல் முகாமை, கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் முதல்வர் ஸ்டாலின் ஜூலை 15-ம் தேதி தொடங்கி வைக்கிறார். அதை தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் நவம்பர் வரை முகாம் நடைபெறும்.
  • நகர்ப்புறங்களில் 13 துறைகளை சார்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளை சார்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். அத்துடன், மருத்துவ முகாம்களும் நடத்தப்படும். மேலும், கலைஞர் மகளிர் உரிமை தொகை பெற தகுதியுள்ள விடுபட்ட பெண்கள் இருந்தால், முகாம் நடைபெறும் நாளில் அங்கு சென்று விண்ணப்பத்தை அளிக்கலாம். மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கான விண்ணப்பம் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் மட்டுமே வழங்கப்படும். இந்த முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  • முகாம் நடைபெறும் நாள், இடம்குறித்த விவரங்கள், அங்கு வழங்கப்படும் அரசு துறைகளின் திட்டங்கள், சேவைகள், அதில் பயனடைவதற்கான தகுதிகள், தேவைப்படும் ஆவணங்கள் குறித்து தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று, தெரிவிப்பார்கள். தகவல் கையேடு, விண்ணப்பத்தையும் வழங்குவார்கள். இந்த பணி ஜூலை 7-ம் தேதி தொடங்க உள்ளது. 3 மாதங்கள் தொடர்ச்சியாக நடைபெறும் இப்பணியில் ஒரு லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபடுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
  • கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான விதிகளில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு சமீபத்தில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அரசுத் துறைகளில் சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று தற்போது ஓய்வூதியம் பெறும் குடும்பங்களை சேர்ந்த ஓய்வூதியர் அல்லாத பெண்கள் விண்ணப்பிக்கலாம். அரசுத் துறைகளில் மானியம் பெற்று நான்கு சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பங்களை சேர்ந்த பெண்களும் உரிமைத் தொகை பெற தகுதியானவர்கள்.
  • அதேபோல, இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதியம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் ஓய்வூதியம் பெறாத பெண்கள் விண்ணப்பிக்கலாம். கணவனால் கைவிடப்பட்ட, 50 வயதுக்கு மேலாகியும் திருமணமாகாத பெண்களுக்கான ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் மற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.




Source : இந்து தமிழ் திசை



Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)