ஆசிய கோப்பை ஹாக்கி 2025 : இந்தியா சாம்பியன்:
- ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டியின் இறுதிச்சுற்றில், இந்தியா தென் கொரியாவை வீழ்த்தி மீண்டுமொருமுறை சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தது.
- தென் கொரியாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இந்தியா 4 - 1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை பந்தாடியது. முதல் பாதி ஆட்டத்தில் 2 கோல் அடித்து முன்னிலை வகித்த இந்திய அணி ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் மேலும் இரு கோல் அடிக்க வெற்றி இந்தியா வசமானது.
- ஆசிய கோப்பையை வென்றதன் மூலம் அடுத்தாண்டு பெல்ஜியம், நெதர்லாந்தில் நடைபெறும் ஹாக்கி உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளது.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி:
- குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். அவர் 452 வாக்குகள் பெற்ற நிலையில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளை வசப்படுத்தினார்.
- குடியரசு துணைத் தலைவர் தேர்தல், நாடாளுமன்ற வளாகத்தில் அறை எண் F-101, வசுதா, முதல் மாடி என்ற முகவரியில் 09.09.2025 காலை 10 மணிக்குத் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி முதல் வாக்கை பதிவு செய்தார்.
- 98%-க்கும் அதிகமாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
- கோவையைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் (68) கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர். ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்ட இவர் அனைவரிடமும் சுமுகமாக பழகக்கூடியவர். சர்ச்சைகளில் சிக்காதவர். கடந்த 1998 மற்றும் 1999-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றிபெற்று மக்களவைக்கு தேர்வானவர். மகாராஷ்டிர ஆளுநராக 2024 ஜூலை 31 முதல் பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
2026-க்கான டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வு அட்டவணை டிசம்பரில் வெளியீடு:
- எந்தெந்த பதவிகளுக்கு என்னென்ன போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என்ற விவரங்களுடன் கூடிய 2026-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணை டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்தார்.
- இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் கூறியது: 2025-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையை கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிட்டோம். அந்த வகையில் 2026-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணை தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த தேர்வு அட்டவணையை டிசம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளோம். என்னென்ன தேர்வுகள் நடத்தப்படும் என்பது அட்டவணை தயாரிப்பின் இறுதி கட்டத்தில்தான் தெரியவரும்.
- கடந்த ஜூலை மாதம் நடந்த ஒருங்கிணைந்த குருப்-4 தேர்வின் முடிவுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி அக்டோபர் மாதம் வெளியிடப்படும்.
சபாட் (ZAPAD) 2025 -பலதரப்பு கூட்டு ராணுவப் பயிற்சி :
- 2025 செப்டம்பர் 10 முதல் 16 வரை ரஷ்யாவின் நிஷ்னியில் உள்ள முலினோ பயிற்சி மைதானத்தில் நடைபெறவுள்ள சபாட் (ZAPAD) 2025 பலதரப்பு கூட்டு ராணுவப் பயிற்சியில் பங்கேற்க 65 பேர் கொண்ட இந்திய ஆயுதப்படை அணி 09.09.2025 புறப்பட்டுச் சென்றது.
- இந்தப் படை அணியில் 57 இந்திய ராணுவ வீரர்களும், இந்திய விமானப்படையின் 7 வீரர்களும், இந்திய கப்பற்படையின் ஒரு வீரரும் இடம் பெற்றுள்ளனர். இந்திய அணிக்கு குமாவோன் படைப்பிரிவு தலைமை வகிக்கிறது.
- ராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது, ஒருவரோடு ஒருவர் இணைந்து செயல்படுவதை மேம்படுத்துவது, வழக்கமான போர்முறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் உத்திகள் மற்றும் தொழில்நுட்பங்கள் மற்றும் நடைமுறைகள் பரிமாற்றத்தில் ராணுவங்களின் பங்கேற்புக்கான தளத்தை வழங்குவது ஆகியவை பலதரப்பு ராணுவப் பயிற்சி சபாட் 2025-ன் நோக்கமாகும்.
- ராணுவப் பயிற்சி சபாட் 2025-ல் பங்கேற்பு என்பது இந்தியா-ரஷ்யா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் தோழமையை வளர்க்கும். இதன் மூலம் ஒத்துழைப்பு உணர்வும், பரஸ்பர நம்பிக்கையும் வலுப்படும்.
சர்வதேச எழுத்தறிவு தினம்:
- ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8 ஆம் தேதி சர்வதேச எழுத்தறிவு தினம் (International Literacy Day )அனுசரிக்கப்படுகிறது.
- மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறை புதுதில்லியில் ஏற்பாடு செய்திருந்த சர்வதேச எழுத்தறிவு தினம் 2025 கொண்டாட்ட நிகழ்ச்சியில் மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவுத் துறையின் இணையமைச்சரும் (தனி பொறுப்பு), கல்வித்துறை இணையமைச்சருமான திரு ஜெயந்த் சவுத்ரி உரையாற்றினார்.
- ‘டிஜிட்டல் யுகத்தில் எழுத்தறிவை ஊக்குவித்தல்’ (Promoting Literacy in the Digital Era)என்ற கருப்பொருளில் கொண்டாடப்பட்ட இந்த நிகழ்ச்சியில், மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்றி, உலகளாவிய எழுத்தறிவிற்கான இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் தொலைநோக்குப்பார்வையை எடுத்துரைத்தார். கடந்த 2011-ல் 74%ஆக இருந்த இந்தியாவின் எழுத்தறிவு விகிதம் 2023-24-ல், 80.9%ஆக உயர்ந்திருப்பதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
- திரிபுரா, மிசோரம் கோவா மற்றும் லடாக்குடன் இணைந்து, முழு எழுத்தறிவை அடைந்த ஐந்தாவது மாநிலமாக இமாச்சலப் பிரதேசம் மாறியுள்ளது. ஜூன் 24, 2024 அன்று, முழு எழுத்தறிவு பெற்ற முதல் யூனியன் பிரதேசமாக லடாக் அறிவிக்கப்பட்டது, குறிப்பிடத்தக்கது.
- பள்ளிப் படிப்பை தவறவிட்ட வயது வந்தோருக்கு கல்வி அளிக்கும் உல்லாஸ் (ULLAS) என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
நேபாளத்தில் ஜென்-Z தலைமுறையினரின் ஊழல் எதிர்ப்பு போராட்டம்:
- நேபாளத்தில் ஜென்-Z தலைமுறையினரின் ஊழல் எதிர்ப்பு போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. தலைநகர் காத்மாண்டுவில் உள்ள அதிபர், பிரதமர், உள்துறை அமைச்சரின் மாளிகைகளுக்கு தீ வைக்கப்பட்டன. நாடாளுமன்றம், அரசு அலுவலக வளாகம், உச்ச நீதிமன்றத்தை போராட்டக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.
- 240 ஆண்டுகளாக மன்னராட்சி நடைபெற்று வந்த நேபாளத்தில், கடந்த 2008-ம் ஆண்டில் மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டது. கடந்த 2024 ஜூலையில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டணி உடைந்து ஆட்சி கவிழ்ந்ததைத் தொடர்ந்து சிபிஎன் (யுஎம்எல்), நேபாள காங்கிரஸ் இணைந்து கூட்டணி அரசை அமைத்தன. சிபிஎன் (யுஎம்எல்) தலைவர் சர்மா ஒலி பிரதமராக பதவி வகித்தார். நேபாளத்தில் அடுத்தடுத்து ஆட்சிகள் மாறினாலும் ஊழல் மட்டும் குறையவில்லை என்ற குற்றச்சாட்டு வலுத்தது.
- நேபாள சமூக வலைதளங்களில் அண்மையில் ‘நெப்போ பேபி’ என்ற பெயரில் வீடியோக்கள் பரவின. அதாவது, நேபாளத்தின் அரசியல் தலைவர்கள், மூத்த அரசு அதிகாரிகள், பிரபலங்களின் வாரிசுகள் தங்களின் ஆடம்பர வாழ்க்கையை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தனர்.
- ஊழல் அரசியல் தலைவர்களை விமர்சித்து பெரும்திரளானோர் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டனர். இந்தச் சூழலில்தான் ஃபேஸ்புக், யூ டியூப், எக்ஸ், டெலிகிராம் உள்ளிட்ட பதிவு செய்யப்படாத 26 சமூக வலைதள கணக்குகளை நேபாள அரசு கடந்த 5-ம் தேதி முடக்கியது.
- இது, நேபாள இளம் தலைமுறையினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களாக 28 வயதுக்கு உட்பட்ட இளம் தலைமுறையினர் தலைநகர் காத்மாண்டுவில் குவிந்து ஊழலுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்றனர். நேபாள பிரதமர் சர்மா ஒலி வீட்டின் மீது கற்களை எறிந்து தாக்குதல் நடத்தினர். இதன்காரணமாக போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 19 பேர் உயிரிழந்தனர். 400-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
- இந்தச் சூழலில் பிரதமர் சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பெரும்பாலான அமைச்சர்களும் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். ஏராளமான எம்எல்ஏக்களும் பதவி விலகி உள்ளனர்.
யுஎஸ் ஓபன் டென்னிஸ் (ஆடவர் ஒற்றையர் ) 2025 :
- அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் முதல் நிலை வீரரும் நடப்பு சாம்பியனுமான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், 2-ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸுடன் மோதினார்.
- இந்த ஆண்டில் மட்டும் இவர்கள் நேருக்கு நேர் மோதும் 3-வது கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டியாக இந்த ஆட்டம் அமைந்ததால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. 2 மணி நேரம் 42 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கார்லோஸ் அல்கராஸ் 6-2, 3-6, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
- சாம்பியன் பட்டம் வென்ற அல்கராஸ் ரூ.41.4 கோடி பரிசுத் தொகையை பெற்றார். 2-வது இடம் பிடித்த ஜன்னிக் சின்னருக்கு ரூ.20.75 கோடி பரிசாக வழங்கப்பட்டது. யுஎஸ் ஓபனில் அல்கராஸ் பட்டம் வெல்வது இது 2-வது முறையாகும். கடந்த 2022-ம் ஆண்டு தொடரிலும் அவர், கோப்பையை வென்றிருந்தார். ஒட்டுமொத்தமாக அல்கராஸ் வென்றுள்ள 6-வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் இதுவாகும்.
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSC PAYILAGAM and happy learning!
current-affairs-in-tamil-08th-09th-september-2025