அக்டோபர் மாதம் 2025 (15.10.2025-17.10.2025) முக்கிய நடப்பு நிகழ்வுகள் :
செப்டம்பர் மாதத்துக்கான ஐசிசி சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருது 2025:
- ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளை கவுரவிக்கும் விதமாக ஐசிசி சார்பில் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், செப்டம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர், வீராங்கனை விருதினை இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக்சர்மா, ஸ்மிருதி மந்தனா வென்றுள்ளனர்.
- ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் அபாரமாக விளையாடிய அபிஷேக் சர்மா, 7 ஆட்டங்களில் 314 ரன்கள் குவித்திருந்தார். இந்த தொடரில் அவரது சராசரி 44.85 ஆகவும், ஸ்டிரைக் ரேட் 200 ஆகவும் இருந்தது. தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட 25 வயதான அபிஷேக் சர்மாவுக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டிருந்தது. மேலும் ஐசிசி டி 20 பேட்டிங் தரவரிசையில் அதிக ரேட்டிங் புள்ளிகளையும் எடுத்து அசத்தியிருந்தார். ஐசிசியின் சிறந்த வீரர்களுக்கான போட்டியில் குல்தீப் யாதவ் மற்றும் ஜிம்பாப்வே அணியின் பிரையன் பென்னட் இடம்பெற்ற நிலையில், அபிஷேக் சர்மா விருதை தட்டிச் சென்றுள்ளார்.
- ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிராக கடந்த மாதம் நடைபெற்ற இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனான ஸ்மிருதி மந்தனா, அபாரமாக விளையாடி ரன்கள் குவித்தார். 3 போட்டிகளில் அவர், 2 சதங்கள், ஒரு அரை சதம் விளாசி அசத்தினார். ஒட்டுமொத்தமாக அவர், கடந்த மாதத்தில் 4 ஒருநாள் போட்டிகளில் 308 ரன்கள் சேர்த்திருந்தார். அவரது சராசரி 77 ஆகவும், ஸ்டிரைக் ரேட் 135.68 ஆகவும் இருந்தது.
வான் பாதுகாப்பு வழங்கும் ஆகாஷ் ஏவுகணைகளை பிரேசிலுக்கு இந்தியா வழங்க உள்ளது :
- ஆகாஷ் ஏவுகணை இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பாகும். தரையில் இருந்து வான் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது ஆகாஷ். இந்த ஏவுகணைகள் எதிரி நாடுகளின் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ட்ரோன்களை வான்வெளியிலேயே இடைமறித்து அழிக்கும்.
- இந்நிலையில், பிரேசிலும் இந்தியாவும் இருதரப்பு பாதுகாப்புத் துறையில் இணைந்து செயல்பட ஏற்கெனவே முடிவெடுத்துள்ளன. அதன் ஒரு கட்டமாக ஆயுதங்களை இணைந்து தயாரிக்க, மேம்படுத்த இரு நாடுகளும் திட்டமிட்டுள்ளன. இந்நிலையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணைகளை பிரேசிலுக்கு வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.
ஐந்தாவது இந்திய இந்தோனேஷிய கூட்டுப்பயிற்சி சமுத்ரா சக்தி 2025:
- இந்திய கடற்படை, இந்தோனேஷிய கடற்படையுடன் இணைந்து மேற்கொள்ளும் இருதரப்பு கூட்டுப்பயிற்சியின் ஐந்தாவது பதிப்பான சமுத்ரா சக்தி-2025 விசாகப்பட்டினத்தில் 2025 அக்டோபர் 14 முதல் 17 வரை நடைபெறுகிறது.
- இந்திய கடற்படையின் நீர் மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பலான ஐஎன்எஸ் கவரட்டி, இந்தோனேஷிய கடற்படையின் கேஆர்ஐ ஜான் லி போர்க்கப்பல் ஆகியவை பங்கேற்கின்றன.
- இருதரப்பு கப்பல் பயணம், கூட்டு யோகா அமர்வுகள், நட்பு ரீதியிலான விளையாட்டுகள், நிபுணர்களின் கருத்து பரிமாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகள் துறைமுகத்தில் நடைபெறும் பயிற்சியின் போது மேற்கொள்ளப்படுகின்றன.
- கடல் பயிற்சியின் போது ஹெலிகாப்டர் இயக்குதல், விமானப் பயிற்சி, ஆயுதங்களை கையாளுதல், தேடுதல் மற்றும் பறிமுதல் பயிற்சி போன்றவை மேற்கொள்ளப்படுகிறது.
சித்த மருத்துவ பல்கலை. மசோதா குறித்த ஆளுநரின் கருத்து நிராகரிப்பு - பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் :
- சட்டப்பேரவையில், தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட முன்வடிவை மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை அறிமுகம் செய்தார்.
- சட்ட முன்வடிவை அறிமுகம் செய்ய அனுமதியளித்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் பேசியது: 'தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்டமுன்வடிவானது, நிதிச் சட்டமுன்வடிவு என்ற வகைப்பாட்டில் வருவதால், இதனை பேரவையில் ஆய்வு செய்ய ஆளுநர் பரிந்துரை பெறப்பட வேண்டும்.
- பொதுமக்கள் கருத்து அறிந்து, கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு, சுகாதாரத் துறையால் சட்ட முன்வடிவு தயாரிக்கப்பட்டு, சட்டத் துறையால் சரிபார்க்கப்பட்டு, சுகாதாரத் துறை அமைச்சரால் பல கட்டங்களில் சரிபார்க்கப்பட்டு, சட்ட முன்வடிவின் பிரதி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
- ஆனால், ஆளுநர் அரசமைப்புச் சட்டப்படியான வழக்கமான நடைமுறையைப் பின்பற்றாமல், இச்சட்டமுன்வடிவில் உள்ள சில பிரிவுகள் குறித்து தன்னுடைய கருத்தைத் தெரிவித்து, அந்தக் கருத்துகள் பேரவையில் அறிமுகப்படுத்தப்படும்போது, பேரவை உறுப்பினர்களுடைய கவனத்துக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இது அரசியல் சட்டத்துக்கும், நமது சட்டப்பேரவை விதிமுறைகளுக்கும் முரணானது.
- ஒரு சட்டமுன்வடிவு பேரவையில் விவாதிக்கப்படும்போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரவை உறுப்பினர்களுக்கு மட்டுமே அதில் திருத்தங்களை முன்மொழியவும், அதற்கான விளக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் திருத்தங்களைத் திரும்பப் பெறவும், இல்லையெனில், வாக்கெடுப்பைக் கோரவும் அதிகாரம் உள்ளது.
- இத்தகைய சட்டமுன்வடிவு பேரவையால் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு அதன்மீது கருத்துகளைத் தெரிவிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்படவில்லை. எனவே, ஆளுநரிடம் இருந்து வந்துள்ள செய்தியில் இடம்பெற்றுள்ள கருத்துகளை இந்த மாமன்றம் ஏற்றுக்கொள்ள இயலாது.
- இந்தப் பேரவை சட்டமுன்வடிவுகளை 'பொருத்தமற்ற முறையில்' அல்லது 'தகுந்த முறையில் அல்லாமல்' ஆய்வு செய்யும் தொனியில், 'பொருத்தமான' அல்லது 'தகுந்த' எனும் பொருள்படக் கூடிய வார்த்தையை ஆளுநர் குறிப்பிட்டிருப்பது, இந்தப் பேரவையின் மாண்பை குறைக்கக்கூடிய கருத்து. அது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
- சட்டம் இயற்றுவது, இப்பேரவைக்கு மட்டுமே உள்ள அதிகாரம். ஆகவே, ஆளுநரிடம் இருந்து வந்துள்ள அந்தக் கருத்துகள் அடங்கிய செய்தி அவைக்குறிப்பில் இடம் பெறுவதை மாநில சுயாட்சியில் நம்பிக்கை கொண்ட எந்த ஓர் உறுப்பினரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதால் அந்தக் கருத்துகளை நான் இங்கே பதிவுசெய்ய விரும்பவில்லை.
- எனவே, '2025-ம் ஆண்டு தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழகச் சட்டமுன்வடிவை பேரவையில் ஆய்வு செய்வதற்கு ஆளுநர் அனுப்பியுள்ள செய்தியில் இருக்கக்கூடிய அவரின் கருத்துகள் மற்றும் பேரவையின் மாண்பைக் குறைக்கக்கூடிய அந்த வார்த்தை அடங்கிய பகுதிகளை இப்பேரவை நிராகரிக்கிறது' என்னும் தீர்மானத்தை மொழிகிறேன்.
- மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவரும் இதனை ஒருமனதாக நிறைவேற்றித் தரவேண்டும்' என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார். இதையடுத்து, குரல் வாக்கெடுப்பு மூலம் முதல்வரின் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
2025-க்கான புகைப்படக் கலைஞர் விருது பெறும் இந்தியர் ராகுல் சச்தேவ் :
- லண்டனில் நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியம், 2025-க்கான சிறந்த புகைப்படக் கலைஞர்களுக்கான விருதை அறிவித்துள்ளது.
- அதன்படி, மிகவும் பாராட்டப்பட்டவர் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த காட்டுயிர் புகைப்படக் கலைஞரும் ராகுல் சச்தேவ் விருது பெறுகிறார்.
முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோருக்கான நிதியுதவி நூறு சதவீதம் அதிகரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஒப்புதல் :
- முன்னாள் படைவீரர்கள் நலத்துறை மூலம் அமல்படுத்தப்படும் திட்டங்களின் கீழ் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான நிதியுதவியை நூறு சதவீதம் அதிகரிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.
- நிரந்தர வருவாய் இல்லாத மூத்த மற்றும் ஓய்வூதியம் பெறாத முன்னாள் படைவீரர்கள் மற்றும் 65-க்கு மேற்பட்ட வயதுடைய விதவைகளுக்கு வறியோர் நிதியுதவியாக மாதாந்திர நிதியுதவி ரூ.4000-த்திலிருந்து ரூ.8000 ஆக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.
- இரண்டாண்டு முதுகலை பட்டப்படிப்பு படித்து வரும் விதவைகள் மற்றும் இரண்டு குழந்தைகள் உடையவர்களுக்கு (1-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை) கல்வி நிதியுதவி மாதந்தோறும் ரூ.1000-லிருந்து, ரூ.2000- ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
- திருமண நிதியுதவி ரூ.50,000-லிருந்து ரூ.1,00,000-மாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னாள் படைவீரர்களின் 2 மகள்கள், விதவை மறுமணம் மற்றும் இந்த உத்தரவுக்குப் பிந்தைய திருமணத்திற்கும் இது பொருந்தும்.
- இந்தத் திருத்தப்பட்ட விகிதங்கள் 2025 நவம்பர் 1 முதல் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு வழங்கப்படும். ஆயுதப்படையினர் கொடி நாள் நிதியத்தில் இடம்பெற்றுள்ள முன்னாள் படைவீரர்கள் நலநிதி மூலம் இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.257 கோடி செலவாகும்.
- முன்னாள் படைவீரர்களின் தியாகம் மற்றும் சேவையை கவுரவிக்க வேண்டும் என்ற அரசின் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப குறைந்த வருவாய் உடைய மூத்த மற்றும் ஓய்வூதியம் பெறாத முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோருக்கான சமூகப் பாதுகாப்பை இம்முடிவு வலுப்படுத்துகிறது.
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSC PAYILAGAM and happy learning!
current-affairs-in-tamil-15th-17th-october-2025