தி ஆபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா -விருது :
- இரண்டு நாள் பயணமாக கானா சென்ற பிரதமர் நரேந்திர மோடி 03.07.2025 அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார்.
- இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உருவாக்கப்பட்ட உலக ஒழுங்கு வேகமாக மாறி வருகிறது” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேலும், “இந்தியாவில் ஜனநாயகம் என்பது வெறும் ஓர் அமைப்பு அல்ல; அது நமது அடிப்படை மதிப்புகளின் ஒரு பகுதி” என்று அவர் குறிப்பிட்டார்.
- கானா நாட்டு அதிபர் ஜான் டிராமணி மகாமா, பிரதமர் நரேந்திர மோடிக்கு தங்கள் நாட்டின் தேசிய விருதான “தி ஆபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா”-வை பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவித்தார்.
- இந்த விருதை அடுத்து, 24-வது சர்வதேச கவுரவத்தை பிரதமர் பெற்றிருப்பதாக மத்திய சிறபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
1 கோடி பங்குச் சந்தை முதலீட்டாளர்களைக் கடந்த மூன்றாவது இந்திய மாநிலம்:
- இந்தியாவில் பங்குச் சந்தைகளில் சேருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பங்குச் சந்தைகளில் பதிவு செய்யப்பட்ட முதலீட்டாளர்களின் எண்ணிக்கையில் 1 கோடியைத் தாண்டிய மூன்றாவது இந்திய மாநிலமாக குஜராத் மாறியுள்ளது என்று தேசிய பங்குச் சந்தை (NSE) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.
- ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேசத்துக்கு அடுத்ததாக 1 கோடி முதலீட்டாளர்களைக் கடந்த மூன்றாவது மாநிலமாக குஜராத் மாறியுள்ளது" என்று என்எஸ்இ தெரிவித்துள்ளது.
- இந்த மூன்று மாநிலங்களும் சேர்ந்து, நாட்டின் மொத்த முதலீட்டாளர்களில் 36 சதவீதத்தைக் கொண்டுள்ளன. மே 2025 நிலவரப்படி, இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட முதலீட்டாளர்களின் மொத்த எண்ணிக்கை 11.5 கோடியை நெருங்கிவிட்டதாக என்எஸ்இ தெரிவித்துள்ளது.
- பிராந்திய வாரியாக, வட இந்தியா 4.2 கோடி பதிவு செய்யப்பட்ட முதலீட்டாளர்களுடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. அதைத் தொடர்ந்து மேற்கு இந்தியா 3.5 கோடியுடன் இரண்டாவது இடத்திலும், 2.4 கோடி முதலீட்டாளர்களுடன் தென்னிந்தியா 3-வது இடத்திலும், 1.4 கோடி முதலீட்டாளர்களுடன் கிழக்கு இந்தியா 4வது இடத்திலும் உள்ளன.
- கடந்த 12 மாதங்களில் வட மாநிலங்களின் வளர்ச்சி 24% மும், கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சி 23% மும், தென் மாநிலங்களின் வளர்ச்சி 22% மும் பதிவாகியுள்ளது. அதே நேரத்தில் மேற்கு இந்தியாவின் வளர்ச்சி 17% ஆக உள்ளது.
- பிப்ரவரி 2024-ல் பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 9 கோடியாக இருந்தது. அதன்பிறகு, ஒவ்வொரு ஐந்து முதல் ஆறு மாதங்களில் ஒரு கோடி முதலீட்டாளர்கள் பங்குச் சந்தைகளில் இணைந்தனர். இதன் காரணமாக, ஆகஸ்ட் 2024-ல் 10 கோடியையும், ஜனவரி 2025-ல் 11 கோடியையும் எட்டியுள்ளது.
தமிழ்நாடு நீர்வள தகவல், மேலாண்மை அமைப்புக்கான (TNWRIMS) இணையதளம்:
- செயற்கைக் கோள் தரவு மற்றும் ஏஐ தொழில்நுட்பம் அடிப்படையில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை கண்டறிதல், நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் நீர்வள தகவல் மேலாண்மை அமைப்புக்கான இணையதளங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 169 உதவி பொறியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.
- தமிழ்நாடு நீர்வள தகவல், மேலாண்மை அமைப்புக்கான (TNWRIMS) இணையதளத்தை உருவாக்க ரூ.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த இணையதளத்தை உருவாக்க, நீரை பயன்படுத்தும் பல்வேறு பங்குதாரர்களிடம் இருந்து அனைத்து தரவுகளும் சேகரிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் எதிர்கால முன்மொழிவை உருவாக்க, நீர் தொடர்பான தரவு தளத்துக்கான, நம்பகத் தன்மையுடன் கூடிய ஒற்றை ஆதாரமாக இந்த இணையதள அமைப்பு (http://tnwrims.tn.gov.in) செயல்படும்.
- நிகழ்நேர தகவலை அளிக்கும் இந்த அமைப்பில் நீர் வழங்கல், தேவை, தரம், பயனர்கள் போன்றவை, கிராம தண்ணீர் வரவு - செலவு, வறட்சி மற்றும் குடிநீர் பற்றாக்குறை நிலவரம், நீர்வரத்து முன்னறிவிப்பு, நீர்த்தேக்க செயல்பாடு மேம்படுத்தல், நிலத்தடி நீர் தகவல், ஆற்றுப் படுகைகள் இடையே நீர் பரிமாற்றம், நீர் பாதுகாப்பு திட்டம் போன்ற 11 தொகுதிகள் உள்ளன. தமிழக நீர்வளத் துறை இணையதளத்தில் இந்த அமைப்பு இணைக்கப்பட்டுள்ளது.
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாதம் சிறை:
- வங்கதேசத்தில் பிரதமராக இருந்த அவாமி லீக் கட்சித் தலைவர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கடந்த ஆண்டு மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இது வன்முறையாக மாறிய தையடுத்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி இந்தியாவில் தஞ்சமடைந்தார். அதன் பிறகு அங்கு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது.
- இதையடுத்து, சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் (ஐசிடி) ஹசீனா மீது பல்வேறு வழக்குகள் பதிவாகி உள்ளன. இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் ஹசீனா ஆஜராக உத்தரவிட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
- இந்நிலையில், ஐசிடி-யின் தலைவர் நீதிபதி முகமது குலாம் முர்துசா மஜும்தார் தலைமையிலான 3 பேர் அடங்கிய அமர்வு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஹசீனாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியது. வங்கதேசத்திலிருந்து தப்பிய பிறகு ஹசீனாவுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டிருப்பது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
2047-க்குள் அனைவருக்கும் காப்பீடு:
- ஆயுள் காப்பீட்டு திட்டங்களை விற்பதற்காக ஏ.யு. ஸ்மால் பைனான்ஸ் வங்கி, லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (எல்ஐசி) நிறுவனத்துடன் இணைந்து செயல்படப் போவதாக அறிவித்துள்ளது.
- இந்த கூட்டு முயற்சி, “2047-க்குள் அனைவருக்கும் காப்பீடு’ என்ற தேசிய தொலைநோக்குப் பார்வையை ஆதரிக்கிறது. இந்த கூட்டாண்மையின் கீழ், டெர்ம் காப்பீடு, எண்டோவ்மென்ட், முழு ஆயுள் காப்பீடு, ஓய்வூதியம் உள்ளிட்ட எல்ஐசி-யின் திட்டங்களை ஏ.யு. ஸ்மால் பைனான்ஸ் வங்கி விற்பனை செய்யும்.
- நாடு முழுவதும் 21 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள ஏ.யு. ஸ்மால் பைனான்ஸ் வங்கியின் 2,456 வாடிக்கையாளர் தொடர்பு மையங்களில் எல்ஐசி திட்டங்கள் கிடைக்கும். இதன்மூலம் கிராமப்புற, சிறுநகரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எல்ஐசி-யின் திட்டங்களால் பயனடைய முடியும்.
- ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை தலைமையகமாக கொண்டு செயல்படும் ஏ.யு. ஸ்மால் பைனான்ஸ் வங்கி கடந்த 1996-ல் நிறுவப்பட்டது. 1.13 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டு உள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இரண்டாவது பெரிய பங்களிப்பை வழங்கும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்:
- நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இரண்டாவது பெரிய பங்களிப்பை வழங்கும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்துப் பேசிய மத்திய அமைச்சர் திரு மஞ்சி, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை 30.1%- பங்களிப்பதாகக் கூறினார்.
- மேலும், நாட்டின் தொழிற்சாலை உற்பத்தியில் 35.4% - ம் மற்றும் ஏற்றுமதியில் 45.73% -மும் பங்களிப்பை குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கொண்டுள்ளன.
- 2020 - ம் ஆண்டு ஜூலை 1 - ம் தேதி தொடங்கப்பட்ட உதயம் போர்ட்டல், குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு இலவச, காகிதப் பயன்பாடற்ற, சுயமாக அறிவிக்கப்பட்ட பதிவு செயல்முறையை வழங்குகிறது. இன்றுவரை அதன் தரவுத்தளத்தில் 3.80 கோடிக்கும் அதிகமான அலகுகளைக் கொண்டுள்ளது என்று திரு. மஞ்சி தெரிவித்தார்.
- மறுபுறம், முறைசாரா குறு நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கும், முன்னுரிமைத் துறை அடிப்படையில் கடன் வழங்குதல் போன்ற முறையான சலுகைகளை அணுகுவதற்கும் ஜனவரி 11 - ம் தேதி தொடங்கப்பட்ட உதயம் உதவி போர்ட்டலின் தரவுத்தளத்தில் 2.72 கோடிக்கும் அதிகமான அலகுகள் உள்ளன.
- இந்த 6.5 கோடி MSME அலகுகள் இன்றுவரை 28 கோடி மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவன அலகுகளின் எண்ணிக்கை பதினைந்து மடங்கு அதிகரித்துள்ளது என்று மத்திய அமைச்சர் கூறினார்.
ஐஎன்எஸ் தமால் என்ற புதிய போர்க்கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது:
- ரஷ்யாவின் கலினின்கிரட் பகுதியில் உள்ள யாந்தர் கப்பல் கட்டும் தளத்தில் நடைபெற்ற விழாவில் ஐஎன்எஸ் தமால் என்ற புதிய போர்க்கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. இந்திய கடற்படை பயன்பாட்டுக்காக போர்க்கப்பல்கள் உள்நாட்டிலும், ரஷ்யாவில் தயாரிக்கப்படுகின்றன.
- எதிரி நாட்டு ரேடாரில் சிக்காத துஷில் ரக போர்க்கப்பல்களை ரஷ்யாவில் தயாரிக்க, இந்திய பாதுகாப்புத்துறை ஆர்டர் கொடுத்தது. இதில் பிரம்மோஸ் ஏவுகணைகள் உட்பட 26 சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
- இந்த கப்பல் ரஷ்யாவின் கலினின்கிரட் பகுதியில் உள்ள யாந்தர் கப்பல் கட்டும் தளத்தில் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பின் இந்த இந்த போர்க்கப்பலை இந்திய கடற்படையில் இணைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- இந்திய கடற்படையின் மேற்கு மண்டல தலைமை அதிகாரி வைஸ் அட்மிரல் சஞ்சய் ஜஸ்ஜித் முன்னிலையில் ஐஎன்எஸ் தமால் கடற்படையில் இணைந்தது.
- புராஜெக்ட் 1135.6 திட்டத்தின் கீழ், எதிரி நாட்டு ரேடாரில் சிக்காத வகையில் தயாரிக்கப்பட்ட 8 போர்க்கப்பல் ஐஎன்எஸ் தமால் ஆகும். துஷில் ரக கப்பலில் இது 2-வது கப்பல். முதல் துஷில் ரக கப்பல் ஐஎன்எஸ் துஷில் என்ற பெயரில் கடந்த ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி கடற்படையில் இணைக்கப்பட்டது.
- இத்திட்டத்தின் கீழ் ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட 7 போர்க்கப்பல்களும் கடற்படையின் மேற்கு மண்டலத்தில் இணைக்கப்பட்டது. ஐஎன்எஸ் துஷில் போர்க்கப்பல் கேப்டன் ஸ்ரீதர் டாடா தலைமையில் இயங்கும்.
- கடந்த 65 ஆண்டுகளில் இந்திய கடற்படைக்கு ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட 51-வது போர்க்கப்பல் ஐஎன்எஸ் தமால் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து மண்ணில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய வீரர் :
- இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் இரட்டை சதம் விளாசி சாதனை படைத்தார்.
- இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் ஷுப்மன் கில். மேலும், ஆசிய நாட்டைச் சேர்ந்த வீரர் இங்கிலாந்து மண்ணில் இரட்டை சதம் அடிப்பது இதுவே முதன்முறையாகும். இதற்கு முன்னர் 2011-ம் ஆண்டு இலங்கையின் திலகரத்னே தில்ஷான் அதிகபட்சமாக 193 ரன்கள் எடுத்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
- வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த 2-வது இந்திய கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஷுப்மன் கில். இதற்கு முன்னர் 2016-ம் ஆண்டு நார்த் சவுண்ட் டெஸ்ட் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக விராட் கோலி இரட்டை சதம் அடித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!
current-affairs-in-tamil-03rd-04th-july-2025