பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் - மத்திய அரசு விளக்கம்:
- பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
- இது தொடர்பாக அவர் அளித்துள்ள பதிலில், "பருவநிலை மாற்றதால் ஏற்படும் தாக்கங்களைக் குறைக்கும் வகையில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. விவசாயம், எரிசக்தித் திறன், பசுமை இந்தியா உள்ளிட்ட 9 முக்கிய துறைகளில் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயல்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
- தேசிய தூய்மை காற்றுத் திட்டத்தின் கீழ் 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 130 நகரங்களில் காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் தொடங்கியுள்ளது.இதற்கென ரூ. 13,036.52 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடும் திட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
- சூரிய மின் உற்பத்தியில் உலகின் முன்னணி நாடாக இந்தியாவை உருவெடுக்கச் செய்யும் வகையில் தேசிய சூரியசக்தி இயக்கம் தொடங்கப்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் சூரிய மின் உற்பத்திக்கான கொள்கைகள் வகுக்கப்பட்டன. இதன்படி, ஜூன் 30-ம் தேதி வரை நாடு முழுவதும் 116.25 ஜிகாவாட் சூரிய மின் உற்பத்தி செய்யப்பட்டு சாதனைப் படைக்கப்பட்டுள்ளது.
- கடந்த 5 ஆண்டுகளில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க அமைச்சகத்திற்கு சூரிய மின் உற்பத்திக்காக ரூ. 38,420.82 கோடி பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் திருத்தப்பட்ட பட்ஜெட் மதிப்பீடு ரூ. 31,483.86 கோடி. செலவு ரூ. 25,165.87 கோடி" என தெரிவித்துள்ளார்.
இந்தியா – இங்கிலாந்து இடையிலான புதிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்:
- இந்திய பிரதமர் நரேந்திர மோடி - இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மெர் முன்னிலையில், இந்தியா - இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கான (CETA) ஒப்பந்தத்தில், இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலும், பிரிட்டன் வர்த்தக அமைச்சர் ஜோனாதன் ரெனால்ட்ஸும் கையெழுத்திட்டனர்.
- ஜவுளி, தோல், காலணிகள், கடல்சார் பொருட்கள், ரத்தினங்கள், நகைகள், கரிம ரசாயனங்கள், பிளாஸ்டிக், வாகன பாகங்கள், கைவினைப் பொருட்கள், சேவைகள் போன்ற உழைப்பு மிகுந்த துறைகள் வலுவான வளர்ச்சிக்கு தயாராக உள்ளன. உலகளாவிய உற்பத்தி மையமாக மாறுவதற்கான இந்தியாவின் பயணத்தை மேலும் விரைவுபடுத்துவதை இது உறுதி செய்யும்.
- இந்தியா - இங்கிலாந்து இடையேயான இந்த ஒப்பந்தம், 'மேக் இன் இந்தியா' தலைமையிலான வளர்ச்சி மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்புக்கு உத்வேகம் அளிக்கும். இந்த ஒப்பந்தம் இந்திய நுகர்வோருக்கு போட்டி விலையில் உயர்தர பொருட்களை வழங்கும். நமது நாடுகளுக்கு இடையே அதிக செழிப்பையும், ஆழமான உறவையும் ஏற்படுத்துவதற்கான வாக்குறுதியை இது கொண்டுள்ளது
- இங்கிலாந்தில் உற்பத்தியாகும் கார்களுக்கு தேவையான உதிரிபாகங்களை தமிழகம் (கோவை) உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள தொழில் துறையினருக்கு பணி ஆணைகள் அதிகம் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் 120 பில்லியன் டாலர் ஏற்றுமதி வாய்ப்பு, இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.
- இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்திய ஏற்றுமதிகளில் சுமார் 99% வரி இல்லாமல இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும், உழைப்பு மிகுந்த இந்திய துறைகளுக்கு கிட்டத்தட்ட 23 பில்லியன் டாலர் மதிப்புக்கு வாய்ப்புகளை இது வழங்குகிறது. உள்ளடக்கிய மற்றும் பாலின-சமத்துவ வளர்ச்சிக்கான புதிய சகாப்தத்தை இந்த ஒப்பந்தம் குறிக்கிறது.
சிறந்த விமான நிலையங்களுக்கான தரவரிசை பட்டியல் -2025
- அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து ‘டிராவல் பிளஸ் லெஷர் (Travel + Leisure)' என்ற பயண இதழ் வெளியாகிறது. இந்த இதழ் 2025-ம் ஆண்டுக்கான சிறந்த விமான நிலையங்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. உலகளாவிய சர்வே அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 1.80 லட்சம் வாசகர்கள் பங்கேற்று 6.50 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை செலுத்தியுள்ளனர்.
- இதன் தரவரிசையில் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம் (சிஎஸ்எம்ஐஏ) 84.23 புள்ளிகளுடன் 9-வது இடத்தை பிடித்துள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 3-வது ஆண்டாக உலகின் சிறந்த 10 விமான நிலையங்களில் ஒன்றாக இது தேர்வு செய்யப்பட்டுள்ளது.மேலும் இந்த ஆண்டு இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய விமான நிலையமாக இது உள்ளது.
- துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையம் 98.57 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
- இதையடுத்து சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம், கத்தார் நாட்டின் தோகாவில் உள்ள ஹமாத் சர்வதேச விமான நிலையம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. அபுதாபியில் உள்ள சயீத் சர்வதேச விமான நிலையம், துபாய் சர்வதேச விமான நிலையம் ஆகியவை முதல் 5 இடங்களுக்குள் வந்துள்ளன.
ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு அறிக்கை:
- ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு அறிக்கை கடந்த 22-ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்கள் வைத்திருக்கும் நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
- இந்த பட்டியலில் கடந்த ஆண்டு 85-வது இடத்தைப் பெற்றிருந்த இந்தியா, தற்போது 77-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதனால் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் இனி உலகளவில் 50 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும் அல்லது விசா-ஆன்-அரைவல் வசதியைப் பெற முடியும்.
- இதில் மலேசியா, இந்தோனேசியா, மாலத்தீவுகள், தாய்லாந்து போன்ற ஆசியாவின் பிரபலமான சுற்றுலா நாடுகளும் அடங்கும். இதேபோல் இலங்கை, மக்காவ், மியான்மர் போன்ற பிற நாடுகளுக்கு சென்று அங்கு விசாவை எளிதில் பெற்றுக்கொள்ள முடியும்.
- மரியாதைக்குரிய அளவுகோலாகக் கருதப்படும் ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு, முன்கூட்டியே விசாவுக்கு விண்ணப்பிக்காமல் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் எத்தனை நாடுகளுக்குள் நுழைய முடியும் என்பதன் அடிப்படையில் பாஸ்போர்ட்களை தரவரிசைப்படுத்துவது குறிப்பிட்டத்தக்கது.
- இந்த வரிசையில் சிங்கப்பூர் நாடு முதலிடம் பெற்றுள்ளது. இந்த நாட்டு குடிமக்கள் 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லமுடியும். ஜப்பான், தென்கொரிய நாடுகளின் பாஸ்போர்ட்களை வைத்திருப்பவர்கள் தலா 190 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லமுடியும். ஜப்பான், தென் கொரிய நாடுகள் இந்தப் பட்டியலில் 2-வது இடத்தைப் பெற்றுள்ளன. ஐக்கிய அரபு அமீரகம் 8-வது இடத்தையும், அமெரிக்கா 10-வது இடத்தையும், சீனா 60-வது இடத்தையும் இந்தப் பட்டியலில் பெற்றுள்ளது.
- 3-வது இடத்தில் ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, பின்லாந்து, டென்மார்க், அயர்லாந்து ஆகிய இடங்கள் உள்ளன. இந்த பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 189 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும். 4-வது இடத்தில் ஆஸ்திரியா, பெல்ஜியம், லக்சம்பெர்க், நெதர்லாந்து, நார்வே, போர்ச்சுக்கல், ஸ்வீடன் ஆகிய நாடுகள் உள்ளன. இந்த நாட்டு பாஸ்போர்ட் பெற்றுள்ளவர்கள் 188 நாடுகளை விசா இல்லாமலேயே அணுக முடியும். நியூஸிலாந்து, சுவிட்சர்லாந்து, கிரீஸ் நாடுகள் 5-வது இடத்தில் உள்ளன.
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!
current-affairs-in-tamil-23rd-24th-july-2025