ரியோ டி ஜெனிரோ பிரகடனம்- (17-வது பிரிக்ஸ் உச்சிமாநாடு 2025)

TNPSC PAYILAGAM
By -
0

Rio de Janeiro Declaration 2025


"அனைத்து நாடுகளின் வளர்ச்சியை உள்ளடக்கிய நீடித்த  நிர்வாகத்திற்கான உலகின் தென்பகுதியில் வளரும் நாடுகளிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்" என்ற கருப்பொருளின் அடிப்படையில் , ஜூலை 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற 17-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில், உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.


ரியோ டி ஜெனிரோ பிரகடனம் 2025:

  • பரஸ்பரம் நாடுகளிடையேயான மதிப்பு, இறையாண்மை, சமத்துவம், ஒற்றுமை, ஜனநாயக நடைமுறைகள், வெளிப்படைத்தன்மை, ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருமித்த கருத்தின் அடிப்படையில்  பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற நாடுகள் தங்களது நிலைப்பாட்டை மீண்டும் உறுதி செய்தன. 17 ஆண்டுக்கால பிரிக்ஸ் அமைப்பின் அரசியல் மற்றும் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும்  நிதி, கலாச்சாரம் மற்றும்  மக்கள் தொடர்பு ஆகிய மூன்று தூண்களின் கீழ் விரிவாக்கப்பட்ட பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், அமைதி, பிரதிநிதித்துவம், சர்வதேச நடைமுறைகள், சீரமைக்கப்பட்ட அமைப்பு முறைகள்,  நீடித்த வளர்ச்சி ஆகியவற்றின் மூலம் மக்களின் நலனுக்கான உத்திசார் கூட்டாண்மையை மேம்படுத்துவதற்கான செயல்பாடுகளில் உறுப்பு நாடுகள் கவனம் செலுத்தும் என்று உறுப்பு நாடுகள் உறுதி பூண்டுள்ளன.
  • பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடாக இந்தோனேசியா, பெலாரஸ், பொலிவியா, கஜகஸ்தான், கியூபா, நைஜீரியா, மலேசியா, தாய்லாந்து, வியட்நாம் குடியரசு, உகாண்டா, உஸ்பெகிஸ்தான் நாடுகள் இடம் பெற்றுள்ளதை வரவேற்கிறோம்.
  • பிரிக்ஸ் உறுப்புநாடுகளைச் சேர்ந்த தலைவர்களின் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நிதி ஆதாரம் குறித்த  பிரகடனம் வெளியிடப்பட்டது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் சர்வதேச நிர்வாக நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை ஏற்றுக்கொள்வதற்கான முக்கியத்துவத்தை இந்தப் பிரகடனம் சுட்டிக்காட்டுகிறது. 
  • பல்தரப்புவாதத்தன்மையை வலுப்படுத்துதல் மற்றும் உலகளாவிய நிர்வாக அமைப்பை சீர்திருத்துதல்,அனைத்து உறுப்பு நாடுகளின் பிரதிநிதித்துவம், சட்டபூர்வ மற்றும், ஜனநாயக அடிப்படையிலான பொறுப்புள்ள சர்வதேச அமைப்பாக உருவெடுக்கச் செய்வதன் மூலம் நிர்வாக நடைமுறைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொண்டு மேம்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை  வலியுறுத்தும் வகையில், இந்த மாநாடு அமைந்துள்ளது. இதில் உலகளாவிய டிஜிட்டல் ஒப்பந்தம் மற்றும் எதிர்கால தலைமுறைகளின் பிரகடனம் ஆகியவை அடங்கும். 
  • சமகால சூழல்களைப் பிரதிபலிக்கும் வகையில் சர்வதேச நாடுகளிடையேயான உறவுகளின் கட்டமைப்புகள் மாற்றியமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டு, உறுப்பு நாடுகள் செயல்படும். ஐநா சபையின் சாசனத்தில் கூறப்பட்டுள்ள நோக்கங்கள் மற்றும் கொள்கைகள் உள்ளிட்ட சர்வதேச சட்டங்களை முழுமையாக பின்பற்றுவதையும் நாடுகளின் இறையாண்மைக்கு மதிப்பளிப்பதையும் சர்வதேச அமைதி, பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உறுப்பு நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும்.  
  • நீடித்த வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில், ஜனநாயக நடைமுறைகள், மனித உரிமைகள், அடிப்படை சுதந்திரத்தை பாதுகாப்பதையும் உறுதி செய்கின்றன. இதனுடன் ஒற்றுமை, பரஸ்பர மரியாதை, நீதி மற்றும் சமத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. 
  • சர்வதேச விவகாரங்களில் முடிவெடுப்பதற்கான நடைமுறைகள், வளர்ந்து வரும் சந்தை வாய்ப்புகள் மற்றும் வளரும் நாடுகளில் குறிப்பாக ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, கரீபியன் தீவுகளைச் சேர்ந்த பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நாடுகள் ஆகியவற்றின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்கும், சமகால சூழல்களுக்கு ஏற்றவாறு நடைமுறைகளை மாற்றியமைப்பதற்கும் பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் வலியுறுத்துகின்றன. 
  • ஐநா சபையின் செயலகம், இதர  சர்வதேச அமைப்புகளில் சம அளவிலான பிரதிநிதித்துவத்தை உரிய நேரத்தில் அடையவும், குறிப்பாக வளரும் நாடுகளில் அதிகரித்து வரும் சந்தை வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், இந்த சர்வதேச அமைப்புகளின் அனைத்து நிலைகளிலும் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கு பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் வேண்டுகோள் விடுக்கின்றன. 
  • ஐ.நா. சபையின் நிர்வாகத் தலைவர்கள், முக்கிய பதவிகளுக்கான நபர்களைத் தேர்வு செய்வது மற்றும் நியமன நடைமுறையில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் மற்றும் உள்ளடக்கிய கொள்கைகளால் இது வழிநடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.  மேலும் ஐ.நா. சாசனத்தின் பிரிவு 101-ன் அனைத்து விதிகளின்படியும் மேற்கொள்ளப்பட வேண்டும். புவிசார் அடிப்படையில் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதையும், பெண்களின் பங்களிப்பு அதிகரிப்பதையும் கருத்தில் கொண்டு, ஐ.நா. அமைப்பில் முக்கிய பதவிகளின் நியமனத்தில் பொது விதி கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று இந்த உச்சிமாநாடு வலியுறுத்துகிறது.
  • ஜோகன்னஸ்பர்கில் 2023-ம் ஆண்டு நடைபெற்ற உச்சிமாநாட்டின் பிரகடனத்தை அங்கீகரித்து, ஐநா சபை ஜனநாயக ரீதியாகவும், புவிசார் பிரதிநிதித்துவ ரீதியாகவும், பயனுள்ள வகையில், திறம்பட செயலாற்றும் வகையில் மாற்றங்களை மேற்கொள்வதற்கும், சர்வதேச கவுன்சிலின் உறுப்பினர்களில் வளரும் நாடுகளின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கும் பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளன. இதன் மூலம் உலக அளவிலான சவால்களுக்கு உரிய தீர்வு காணும் வகையில்  ஆப்பிரிக்கா, ஆசியா, லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த வளர்ந்து வரும் மற்றும் வளரும் நாடுகள், பிரிக்ஸ் நாடுகள் உட்பட, சர்வதேச விவகாரங்களில், குறிப்பாக ஐநா சபையின் பாதுகாப்பு கவுன்சில் உட்பட, அனைத்து நிலைகளிலும் வளரும் நாடுகளின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று இந்த மாநாட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 
  • 2022-ம் ஆண்டு பெய்ஜிங்கிலும் மற்றும் 2023-ம் ஆண்டு ஜோகன்னஸ்பர்கிலும் உச்சிமாநாட்டில் வெளியிடப்பட்ட பிரகடனங்களை நினைவுகூர்ந்து, ஐநா சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளான சீனாவும் ரஷ்யாவும்,  ஐ.நா. சபையில் மற்றும் அதன் பாதுகாப்பு கவுன்சில் உட்பட முக்கிய பங்காற்ற வேண்டும் என்ற பிரேசில் மற்றும் இந்தியாவின் விருப்பங்களுக்கு  ஆதரவு தெரிவித்துள்ளன.
  • ஐநா சபையின் 80-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, பொதுச் சபையின் 75/1, 77/335 மற்றும் இதர தீர்மானங்களையும் இந்த உச்சி மாநாடு நினைவு கூர்ந்துள்ளது. மேலும் ஐநா சபையின்  ஆணைகளை நிறைவேற்றத்  தேவையான அனைத்து ஆதரவையும் பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தப்பட வேண்டியது குறித்த விவாதங்களில் புதிய நடைமுறைகளை உருவாக்கவும், பொதுச் சபைக்கு புத்துயிரூட்டவும், பொருளாதார, சமூக கவுன்சிலை வலுப்படுத்தவும் தொடர்ந்து பணியாற்றுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததன் 80-வது ஆண்டு நிறைவைக்  குறிக்கும் வகையில் 2025-ம் ஆண்டில் குறிப்பாக ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, பசிபிக் மற்றும் உலகின் பிற பகுதிகளில் மனிதகுலத்திற்கு பெருந்துயரத்தை ஏற்படுத்திய இரண்டாம் உலகப் போரின், வரலாற்று நிகழ்வையடுத்து, எதிர்கால தலைமுறையினரை போர் போன்ற இக்கட்டான சூழலிலிருந்து பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையை உருவாக்குவதற்கான தீர்மானம் 79/272-க்கு பிரிக்ஸ் நாடுகள் முழு ஆதரவை வழங்குகிறது.
  • உலக அளவில் நிலவி வரும் பொருளாதார நிச்சயமற்ற சூழலில், சர்வதேச செலாவணி நிதியம் உலகளவிலான நிதிசார் பாதுகாப்பு கட்டமைப்பைக் கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக பொருளாதாரத்தில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளை நிதியுதவி அளித்து ஆதரிக்க வேண்டும். மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத நிலையிலும்,  பின்தங்கியுள்ள நாடுகளுக்கு 16-வது பொது ஒதுக்கீட்டு மதிப்பாய்வின்படி முன்மொழியப்பட்ட நிதி ஒதுக்கீட்டிற்கு உறுப்பு நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளது. 
  • எதிர்காலத்தில் பொருளாதார விவகாரங்கள் குறித்த விவாதங்களை வழிநடத்தவும், அவசரகால நிதி ஒதுக்கீடு, நிர்வாக சீர்திருத்த நடைமுறைகள் தொடர்பான கருத்துக்களை ஒருங்கிணைப்பதும் பொதுவான கொள்கைகளை உருவாக்குவதில் சர்வதேச செலாவணி நிதியத்தின் நிர்வாக வாரியம், நிதிக்குழுவின் பிரதிநிதிகள் மேற்கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு பிரிக்ஸ் நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
  • பிரேசில் நாட்டுடன் இணைந்து உலக வங்கிக் குழுமத்தின்  பன்முகத்தன்மையை வலுப்படுத்தவும், சிறந்த, பயனுள்ள நடைமுறைகளுடன் கூடிய மேம்பாட்டு நிதி நிறுவனமாக அதன் சட்டப்பூர்வ தன்மையை மேம்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 
  • லிமா கொள்கைகளுக்கு இணங்க, வளரும் நாடுகளின் பிரதிநிதித்துவத்திற்காக பிரிக்ஸ உறுப்பு நாடுகள் ஆதரவளிக்கும். பருவநிலை மாற்றம், டிஜிட்டல் மயமாக்கல் போன்ற சவாலான சூழலில், வேலைவாய்ப்பு உருவாக்கம் உட்பட வறுமை, சமத்துவமின்மை ஆகியவற்றையும் எதிர்கொள்வதில் உலக வங்கியின் மைய நோக்கமாக இருப்பதை பிரிக்ஸ் நாடுகள் உறுதி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று இந்தப் பிரகடனம் தெரிவிக்கிறது.
  • உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மோதல்கள், சர்வதேச விதிகளில் தற்போதைய நிலை குறித்து பிரிக்ஸ்  நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. வளரும் நாடுகளில்  பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்குத் தேவையான நிதியை வழங்குவதில் தீங்கு விளைவிக்கும் வகையில், உலகளாவிய ராணுவ நடவடிக்கைகளுக்கான செலவினங்களில் ஏற்பட்டுள்ள கூடுதல் செலவுகள் குறித்து பிரிக்ஸ் நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.  
  • நீடித்த வளர்ச்சி, பசி, வறுமையை அகற்றுதல், பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்தல் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச விவகாரங்களில் பல்வேறு தரப்பிலான அணுகுமுறைகளுக்கு உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவிக்கின்றன.
  • உலகம் முழுவதிலும் மனித குலத்திற்கான எதிரான நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கும் பன்முனை ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் உறுப்பு நாடுகள் முடிவு செய்துள்ளன. 
  • சர்வதேச விதிகளை மீறி செயல்படுவதை பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் வன்மையாக கண்டிக்கின்றன. இதில் மக்களின் உடைமைகள், சிவில் உள்கட்டமைப்பு உட்பட பல்வேறு கட்டமைப்புகளைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள், மனிதகுலத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவது போன்ற செயல்பாடுகளும் இதில் அடங்கும். 
  • சர்வதேச விதிமுறைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொறுப்புக்கூற வேண்டியதன் அவசியத்தை பிரிக்ஸ் அமைப்பு சுட்டிக்காட்டுகிறது. சர்வதேச விதிமீறல்கள் உடனடி பிரச்சனைகளுக்கு வழிவகுப்பதுடன் மோதலுக்குப் பிந்தைய மறுகட்டமைப்புக்குத் தேவையான பொருள்கள் மற்றும் சமூக அடித்தளங்களை அழிப்பதன் மூலம் நீடித்த அமைதிக்கான வாய்ப்புகளையும் குறைக்கிறது. எனவே, சர்வதேச விதிமுறைகளை மதித்து பின்பற்றவும், அதனை  திறம்பட செயல்படுத்தவும் பிரிக்ஸ் நாடுகள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்கப்படும்.
  • 2025 ஜூன் 13-ம் தேதி முதல் ஈரான் நாட்டுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை பிரிக்ஸ் அமைப்பு கண்டிக்கிறது. இந்த நடவடிக்கை  சர்வதேச சட்ட விதிகள் மற்றும் ஐநா சபையின் சாசனத்தை மீறுவதாகும். மேலும் மத்திய கிழக்கு நாடுகளில்  பாதுகாப்பு சூழலுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து பிரிக்ஸ் நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. 
  • சர்வதேச அணுசக்தி அமைப்பின் முழுமையான  பாதுகாப்பு அம்சங்களின் கீழ் பொது உள்கட்டமைப்பு மற்றும் அணுசக்தி நிலையங்கள் மீது  நடத்தப்பட்ட தாக்குதல்கள் சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச அணுசக்தி முகமையின் தீர்மானங்களை மீறுவதாக உள்ளதால் இதற்கு பிரிக்ஸ் நாடுகள் தங்களது கவலையைத் தெரிவிக்கின்றன. இந்தச் சூழலில், பிராந்திய சவால்களை எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்ட தூதரக ரீதியிலான முயற்சிகளுக்கு பிரிக்ஸ் நாடுகள் தொடர்ந்து ஆதவளிக்கும். இந்த விஷயத்தில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்று பிரிக்ஸ் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
  • காசா மீதான இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல்கள், மனிதாபிமான உதவிகள் அந்நாட்டு மக்களுக்கு வழங்குவதைத் தடுக்கும் நிலையில், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் நிலவும் சூழல் குறித்து பிரிக்ஸ் நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. 
  • சர்வதேச சட்டத்தைக் குறிப்பாக சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தை கடைபிடிக்குமாறு பிரிக்ஸ் நாடுகள் வேண்டுகோள் விடுக்கின்றன. மனிதாபிமான உதவிகளை அரசியல்மயமாக்குவது அல்லது ராணுவமயமாக்கும் முயற்சிகளை பிரிக்ஸ் அமைப்பு கண்டிக்கிறது. உடனடி, நிரந்தர மற்றும் நிபந்தனையற்ற போர்நிறுத்த முடிவை அடையவும் காசா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசத்தின் இதர பகுதிகளிலிருந்து இஸ்ரேலியப் படைகளை முழுமையாக திரும்பப் பெறுவதற்கான பேச்சு வார்த்தை நடத்தவும் சர்வதேச சட்டத்தை மீறி தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பணயக்கைதிகள் மற்றும் கைதிகளை விடுவிப்பதற்கும் மனிதாபிமான உதவிகளை தடையின்றி வழங்குவதற்கும் இது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடு வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர்களை பிரிக்ஸ் அமைப்பு வலியுறுத்துகிறது.
  • காசா பகுதி ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசத்தின் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக உள்ளது என்பதை பிரிக்ஸ் அமைப்பு நினைவு கூர்கிறது. இந்த விஷயத்தில், மேற்குக் கரையும் காசா பகுதியும் பாலஸ்தீன அதிகார எல்லைக்குள் இணைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை பிரிக்ஸ் அமைப்பு சுட்டிக்காட்டுகிறது. மேலும் பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் சுதந்திர பாலஸ்தீன அரசுக்கான உரிமையும் இதில் அடங்கும்.
  • லெபனானில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதை பிரிக்ஸ் அமைப்பு வரவேற்கிறது. மேலும் அனைத்து தரப்பினரும் விதிமுறைகளைப் பி்ன்பற்றவும் ஐநா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 1701-ஐ முழுமையாக செயல்படுத்தவும் பிரிக்ஸ் அமைப்பு வேண்டுகோள் விடுகிறது. போர் நிறுத்தம், இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றின் தொடர் விதி மீறல்களை பிரிக்ஸ் அமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. லெபனான் அரசுடனான ஒப்பந்த விதிகளை முறையாக மதிக்கவும், தெற்கு லெபனானில் உள்ள ஐந்து தளங்கள் உட்பட அந்நாடு முழுவதிலும் இருந்து ஆக்கிரமிப்புப் படைகளை திரும்பப் பெறவேண்டும் என்று இஸ்ரேலை பிரிக்ஸ் நாடுகள் வலியுறுத்துகின்றன.
  • "ஆப்பிரிக்க நாடுகளின் விவகாரங்களுக்கான தீர்வுகள்" என்ற கொள்கை ஆப்பிரிக்கக் கண்டத்தில் மோதல் போக்குகளுக்கு தீர்வு காணும் வகையில் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதை பிரிக்ஸ் அமைப்பு வலியுறுத்துகிறது. மோதல் போக்குகளைத் தடுத்து தீர்வு காண்பதில் ஆப்பிரிக்க ஒன்றியம் ஆற்றியுள் பங்களிப்பிற்கு பிரிக்ஸ் அமைப்பு ஆதரவளிக்கிறது.. இந்த வகையில், ஆப்பிரிக்கக் கண்டத்தில் ஆப்பிரிக்க ஒன்றிய அமைதிக்கான ஆதரவு நடவடிக்கைகள், மத்தியஸ்த முயற்சிகள், அமைதிக்கான நடைமுறைகள் போன்ற முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்வதற்கான புதிய வழிவகைள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று பிரிக்ஸ் அமைப்பு வலியுறுத்துகிறது.
  • ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் புதிய மற்றும் நீடித்த ஆயுத மோதல்களால் ஏற்படும் கடுமையான மனிதாபிமான நெருக்கடிகள், குறிப்பாக சூடான், கிரேட் லேக்ஸ் பகுதி மற்றும் ஆப்பிரிக்காவின் கொம்புப் பகுதியில் ஏற்படும் மோதல்களின் பேரழிவு விளைவுகள் குறித்து பிரிக்ஸ் அமைப்பு கவலை தெரிவிக்கிறது. அதே வேளையில், நீடித்த அமைதி மற்றும் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பல்வேறு ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் அமைப்புகளின் முயற்சிகளுக்கு பிரிக்ஸ் அமைப்பு பாராட்டுத் தெரிவிக்கிறது. இந்தபு் பகுதிகளில்  நிலவும்  நெருக்கடிகளுக்கு அரசியல் ரீதியிலான தீர்வுகளைக் கண்டறிவதை நோக்கமாகக் கொண்ட முயற்சிகளுக்கு பிரிக்ஸ் ஆதரவளிக்கிறது..
  • ஹைட்டியில் பாதுகாப்பு, மனிதாபிமானம் மற்றும் பொருளாதார நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவது குறித்து பிரிக்ஸ் நாடுகள் கவலை கொண்டுள்ளது. தற்போதைய நெருக்கடிக்கு உள்ளூர் அரசியல் கட்சிகள், நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகளுக்கு இடையே பேச்சுவார்த்தை  நடத்தப்படுவதன் மூலம் ஒருமித்த கருத்தை உருவாக்குவதை உள்ளடக்கிய தீர்வு அவசியமாகும். பாதுகாப்பு நிலைமைகளை மேம்படுத்துவதற்கும், நீண்டகால சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான அடித்தளங்களை அமைப்பதற்கும் ஹைட்டி அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை ஆதரிக்க வேண்டும் என்று சர்வதேச நாடுகளுக்கு பிரிக்ஸ் அழைப்பு விடுக்கிறது.
  • பயங்கரவாதச் செயல்கள் எந்த வடிவத்தில் இருந்தாலும் அதனை வன்மையாகக் கண்டிப்பதாக பிரிக்ஸ் அமைப்பு உறுதிபட தெரிவித்துள்ளது. ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு-காஷ்மீரில் 26 பேர்களின் உயிரிழப்புக்குக் காரணமான பயங்கரவாதத் தாக்குதலை பிரிக்ஸ் அமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது. எல்லை தாண்டிய பயங்கரவாதச் செயல்கள், பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி வழங்குவது அவர்களுக்கு புகலிடம் அளிப்பது உட்பட, பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் எதிர்த்துப் போரிடுவதற்கான உறுதிப்பாட்டை பிரிக்ஸ் வலியுறுத்துகிறது. 
  • பயங்கரவாதச் செயல்களை  மதம், தேசியம், நாகரீகம் மற்றும் இனக்குழுக்களுடன் தொடர்புபடுத்தக்கூடாது என்றும், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைவரும், அவர்களுக்கு ஆதரவளிப்பவர்களும், தேசிய மற்றும் சர்வதேச சட்டத்தின்படி பொறுப்பேற்கப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் பிரிக்ஸ் அமைப்பு வலியுறுத்துகிறது. 
  • பயங்கரவாதச் செயல்களை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது என்றும் அதனை எதிர்ப்பதில் உள்ள இரட்டை நிலைப்பாட்டை நிராகரிப்பது என்றும் பிரிக்ஸ் முடிவு செய்துள்ளது. பயங்கரவாத அச்சுறுத்தல்களைத் தடுப்பதற்கும் எதிர்கொள்வதற்கும் உலகளவில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள், ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம், குறிப்பாக அதன் நோக்கங்கள் மற்றும் கொள்கைகள், மற்றும் சர்வதேச மரபுகள், நெறிமுறைகள், குறிப்பாக சர்வதேச மனித உரிமைகள் சட்டம், சர்வதேச அகதிகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டம் உள்ளிட்ட சர்வதேச சட்டத்தின் கீழ் உள்ள கடமைகளுக்கு முழுமையாக இணங்க வேண்டும். 
  • பிரிக்ஸ் பயங்கரவாத எதிர்ப்பு பணிக்குழு மற்றும் அதன் ஐந்து துணைக்குழுக்களின் செயல்பாடுகளை பிரிக்ஸ் பயங்கரவாத எதிர்ப்பு உத்தி, பிரிக்ஸ் பயங்கரவாத எதிர்ப்பு செயல் திட்டம், நிலைப்பாட்டு அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் உறுப்பு நாடுகள் வரவேற்றுள்ளன. பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் அனைத்து நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும். ஐ.நா. கட்டமைப்பில் சர்வதேச பயங்கரவாதம் குறித்த விரிவான மாநாட்டை விரைவாக இறுதி செய்ய வேண்டும் என்று பிரிக்ஸ் நாடுகள் அழைப்பு விடுத்துள்ளது.
  • அணுஆயுத அச்சுறுத்தல், அதிகரித்து வரும் ஆயுதப் பயன்பாடு தொடர்பான அபாயங்கள் குறித்து பிரிக்ஸ் நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. உலக அளவில் நிலைத்தன்மை, சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஆயுதக் குறைப்பு, ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் பரவல் தடுப்பு முறையை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து பிரிக்ஸ் வலியுறுத்துகிறது. தற்போதுள்ள அனைத்து அணு ஆயுதங்கள் இல்லாத மண்டலங்களுக்கும், அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான அல்லது அச்சுறுத்தலுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய உறுதிமொழிகளுக்கும் பிரிக்ஸ் ஆதரவளிக்கிறது. 
  • "பிரிக்ஸ் பொருளாதார கூட்டாண்மைக்கான உத்தி 2025"-ன்  முடிவுகளை உறுப்பு நாடுகள் வரவேற்கின்றன. இந்த நடவடிக்கை, பிரிக்ஸ் நாடுகளிடையே ஒத்துழைப்பு மற்றும் துறைசார் மேம்பாடுகள், உத்திகள், திட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் ஆகியவற்றில் உறுப்பினர்களால் ஒத்துழைப்பதற்கான வழிகாட்டுதலையும் கட்டமைப்பையும் வழங்குகிறது. இது பலதரப்பு வர்த்தக அமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சர்வதேச வர்த்தகம், நிதிசார் ஒத்துழைப்பு, நீடித்த வளர்ச்சி தொடர்பான பிரச்சனைகளில் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்த உதவுகிறது.
  • புதிய மேம்பாட்டு வங்கி, பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்களை மேற்கொள்ள உள்ள நிலையில், வளரும் நாடுகளின் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்குத் தேவையான முதலீடுகள் மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்பை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை விரிவுபடுத்த உள்ளது. அதன் நிர்வாக கட்டமைப்பை வலுப்படுத்துவதையும் பிரிக்ஸ் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த வங்கியின் நிறுவன மீள்தன்மை மற்றும் செயல்பாட்டு திறனை மேம்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை பிரிக்ஸ் அமைப்பு ஊக்குவிக்கிறது.
  • அறிவுசார் சொத்துரிமை குறித்த நடவடிக்கைகளில் உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம் என்பதையும் இந்த உச்சி மாநாடு வலியுறுத்துகிறது. அறிவுசார் சொத்து விழிப்புணர்வு மற்றும் செயல்பாட்டு வழிகாட்டுதல் கட்டமைப்பால் வழிநடத்தப்படும் தேர்வாளர்களின் பயிற்சியை ஊக்குவித்தல், பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு வலுவான பங்களிப்பைத் தேடுதல் போன்ற 8 ஒத்துழைப்பு பிரிவுகளின் கீழ் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு பிரிக்ஸ் அமைப்பு ஆதரவளிக்கும்.
  • பருவநிலை மாற்றம் போன்ற புவிசார்  சவால்களை எதிர்கொள்ள தேவையான பன்முகத்தன்மையை நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை பிரிக்ஸ் வலியுறுத்துகிறது. பருவநிலை தொடர்பான பாரீஸ் ஒப்பந்தத்தின் நோக்கம் மற்றும் இலக்குகளை எட்டுவதில் உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பாரீஸ் ஒப்பந்தத்தின் உறுதிப்பாட்டை நிலைநிறுத்தவும், பருவநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது.
  • பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் தனியார் மற்றும் பொதுத்துறை முதலீடுகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், சுற்றுச் சூழல் ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் பாரீஸ் ஒப்பந்தத்தை முறையாக செயல்படுத்துவதை பிரிக்ஸ் ஆதரிக்கிறது.
  • பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் மாசுவைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள், சுற்றுச்சூழல் மீள்தன்மையைப் பாதுகாப்பதற்கான செயல்முறைகள் ஆகியவற்றில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் முக்கியப் பங்கு வகிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ஒவ்வொரு நாட்டில் உள்ள சூழல்கள், திறன்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அதே நேரத்தில் திறன் மேம்பாடு, தொழில்நுட்பப் பரிமாற்றம் போன்ற செயல்பாடுகள் மூலம் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மையில் கவனம் செலுத்துவதுடன், வளரும் நாடுகளின் பொருளாதாரத்தைப் பாதிக்காத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை பிரிக்ஸ் அமைப்பு உறுதி செய்கிறது.
  • டிஜிட்டல் மயமாக்கல் நடவடிக்கைகள் மூலம் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தை மேம்படுத்துதல், நிதிசார் நடவடிக்கைகளை உறுதி செய்தல். சரக்குப் போக்கவரத்துக்கான இணைப்பை மேம்படுத்துதல்,. எரிசக்தி, உணவுப் பாதுகாப்பு, விமானப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து மேம்பாடு, நவீன விவசாய தொழில்நுட்பங்கள் ஆகியவற்றின் மூலம் பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திட்டங்களுக்கான கொள்கை ரீதியிலான பரிந்துரைகள் மூலம் பிரிக்ஸ் அமைப்பின் வர்த்தக கவுன்சிலின் செயல்பாடுகளுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரியோ டி ஜெனிரோ நகரில் பிரேசில் தலைமையில் 17-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டை நடத்தியதற்காக அந்நாட்டு அரசுக்கும் மக்களுக்கும் பிரிக்ஸ் அமைப்பின் உறுப்புநாடுகள் நன்றி தெரிவித்துள்ளன.


இந்தியா தலைமையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு உறுப்பு நாடுகள் தங்களது முழு ஆதரவை வழங்குவதாக இந்தக் கூட்டுப் பிரகடனம்(Rio de Janeiro Declaration) தெரிவிக்கிறது.


SOURCE : https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2143091



Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)