இந்தியாவில் 79-வது சுதந்திர தினம் :
- இந்தியாவில் 79-வது சுதந்திர தினம் 15.08.2025 நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
- இதை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடிக்கு, ரஷ்ய அதிபர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- செங்கோட்டை சுதந்திர தின விழாவுக்காக அச்சிடப்பட்டிருக்கும் அழைப்பிதழில் ஆபரேஷன் சிந்தூரின் சின்னம் பொறிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஆபரேஷன் சிந்தூரை விவரிக்கும் வகையில் செங்கோட்டை வளாகத்தில் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது.
- செங்கோட்டை சுதந்திர தின விழாவில் நாடு முழுவதும் இருந்து 85 பஞ்சாயத்து தலைவர்கள், பாதுகாப்புப் படை, விளையாட்டு, தன்னார்வ தொண்டு ஊழியர்கள் உட்பட ஒட்டுமொத்தமாக 5,000 சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்க உள்ளனர். தேசிய கீதம் இசைக்கும் இசைக் குழுவில் முதல்முறையாக 11 அக்னி வீரர்கள் பங்கேற்கின்றனர்.
டெல்லியில் பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் கூறியதாவது:
- ஆபரேஷன் சிந்தூரின்போது இந்தியாவின் தொழில்நுட்ப திறனை பார்த்து உலகம் வியந்தது. பாகிஸ்தான் ராணுவம், நமது ராணுவ தளங்கள், விமானப் படைத்தளங்கள்,வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மக்களை குறிவைத்து ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் மிகப்பெரிய தாக்குதல்களை நடத்தியது.
- அனைத்து ஏவுகணைகளும் ட்ரோன்களும் நடுவானில் அழிக்கப்பட்டன. பாகிஸ்தானால் சிறிய சேதத்தைக்கூட ஏற்படுத்த முடிய வில்லை. வரும் 2035-ம் ஆண்டுக்குள் மருத்துவமனைகள், ரயில்வே கட்டமைப்புகள், வழிபாட்டுத் தலங்கள் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு புதிய தொழில்நுட்ப தளங்கள் மூலம் முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும்.நாட்டின் வான் பாதுகாப்புக்காக சுதர்சன சக்கர திட்டம் தொடங்கப்படும். இந்த சுதர்சன சக்கரம் சக்திவாய்ந்த ஆயுத அமைப்பாக இருக்கும், எதிரியின் தாக்குதலை முறியடிப்பது மட்டுமல்லாமல், எதிரியை பல மடங்கு அதிகமாகத் தாக்கும் வலிமையைக் கொண்டிருக்கும்.
- முன்பு செமிகண்டக்டர் தொழிற்சாலைகளை அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவே இல்லை. அதே நேரத்தில் மற்ற நாடுகள் அதில் செழித்தன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்தியா இப்போது இதில் தீவிரமாக இயங்குகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள், நம் நாடு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் சிப்பை வெளியிடும்.
- ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள ஒரு பெரிய வேலைவாய்ப்பு திட்டத்தை தொடங்குகிறோம். இதன் கீழ் புதிதாகப் பணியில் இணையும் இளைஞர்கள் ரூ.15,000 பெறுவார்கள். இந்தத் திட்டம் 3 கோடி இளம் இந்தியர்களுக்கு பயனளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவின் அணுமின் உற்பத்தி திறனை பத்து மடங்குக்கு மேல் அதிகரிக்கும் பணியின் ஒரு பகுதியாக, 10 புதிய அணு உலைகளுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
- அடுத்த தலைமுறை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சீர்திருத்தங்கள் தீபாவளியன்று வெளியிடப்படும்.
- நமது பழங்குடியினப் பகுதிகளும் இளைஞர்களும் மாவோயிசத்தின் பிடியில் சிக்கி இருந்தனர். இன்று நாம் அத்தகைய மாவட்டங்களின் எண்ணிக்கையை 125-ல் இருந்து 20-ஆக குறைத்துள்ளோம்.
- எல்லைப் பகுதிகளில் ஊடுருவல், சட்டவிரோத இடப்பெயர்வு ஆகியவை காரணமாக மக்கள்தொகை ஏற்றத்தாழ்வின் ஆபத்துகளை கவனிக்க வேண்டி உள்ளது. இந்த தேசிய பாதுகாப்பு சவாலை எதிர்கொள்ளவும், நாட்டு மக்களின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, உரிமைகள் ஆகியவை பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யவும் உயர் அதிகாரம் கொண்ட மக்கள்தொகை ஆய்வு இயக்கத்தைத் தொடங்குகிறோம்.
- பட்ஜெட்டில் பெரும் பங்கு இன்னும் பெட்ரோல், டீசல், எரிவாயு இறக்குமதிக்கு செல்கிறது. சூரிய சக்தி, ஹைட்ரஜன், நீர் மின்சக்தி, அணுசக்தி ஆகியவற்றில் பெரிய விரிவாக்கங்களுடன், கடல் வளங்களைப் பயன்படுத்த தேசிய ஆழ்கடல் ஆய்வுத் திட்டத்தை தொடங்குகிறோம். என பிரதமர் மோடி தெரிவித்தார்.
பரேஷன் சிந்தூரில் பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய சிவகங்கை ராணுவ வீரருக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது :
- காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை இந்தியா அழித்தது. அதில் இந்தியாவை தாக்குவதற்காக பாகிஸ்தான் ஏராளமான ட்ரோன்களை அனுப்பியது. அப்போது, எல்லை பாதுகாப்புப் பணியில் இருந்த சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே முத்தூர் ஊராட்சியிலுள்ள குறிச்சியைச் சேர்ந்த ராணுவ வீரர் கந்தன் (48), பாகிஸ்தான் ட்ரோன்களை செயலிழக்கச் செய்தார்.
- அவரது வீரதீரச் செயலை பாராட்டி, மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள ராணுவ தலைமையகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கந்தனுக்கு தங்கப் பதக்கத்தை ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி வழங்கி பாராட்டினார்.
கல்லணையின் நிரந்தர அஞ்சல் முத்திரை வெளியீடு :
- கல்லணை அணையின் வரலாற்று சிறப்பைப் பிரதிபலிக்கும் நிரந்தர அஞ்சல் முத்திரையினை (Permanent Pictorial Cancellation) மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் திருமதி தி. நிர்மலா தேவி அவர்கள், தஞ்சாவூர் மாவட்டம், தோகூர் துணை அஞ்சலகத்தில் 15.08.2025 அன்று அறிமுகப்படுத்தினார்.
- இந்த கலைமிகு நிரந்தர அஞ்சல் முத்திரை, உலகின் பழமையான மற்றும் இன்னும் செயல்பாட்டிலுள்ள நீர்ப்பாசன அணைகளில் ஒன்றாகக் கருதப்படும் கல்லணையின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- கி.பி. 2 ஆம் நூற்றாண்டில், புகழ்பெற்ற சோழ மன்னன் கரிகால சோழன் காவிரி நதியின் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தவும், வளமான காவிரி டெல்டா பகுதிக்கு நீர்ப்பாசனத்தை வழங்கவும் கல்லணையை கட்டியுள்ளார். முழுக்க முழுக்க பெரிய கற்கள் கொண்டு கட்டப்பட்ட இந்த அணை, சுமார் 329 மீட்டர் நீளமும் 20 மீட்டர் அகலமும் கொண்டது.
- காலத்தின் தேவைக்கு ஏற்ப சில நவீனப்படுத்தல்கள் மற்றும் முன்னேற்றங்கள் கொண்டுவரப்பட்டிருந்தாலும், இன்று வரை, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட அதே வலிமையுடன் காவிரி நதியின் ஓட்டத்தை வழிநடத்தி வருகிறது.
- கல்லணை, தமிழரின் பொறியியல் திறமை, நீர்ப்பாசன அறிவு மற்றும் நிலைத்த வள மேலாண்மையின் சான்றாக விளங்குகிறது. சோழர்கள், விவசாயத்தையே பொருளாதார அடித்தளமாகக் கொண்டவர்கள் என்பதால், தங்கள் ஆட்சிக் காலத்தில் நீர்ப்பாசனத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தனர். கல்லணையின் மூலம் காவிரி டெல்டா பிரதேசம் ‘தென்னிந்தியாவின் அரிசிக் களஞ்சியம்’ எனப் போற்றப்பட்டது.
நடிகர் ரஜினிகாந்த் திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்:
- கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான 'அபூர்வ ராகங்கள்' திரைப்படம் மூலமாக ரஜினிகாந்த் சினிமாவில் அறிமுகமானார்.
- 'அபூர்வ ராகங்கள்' திரைப்படம் 1975-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந்தேதி வெளியானது. இந்த 50 ஆண்டுகளில் ரஜினிகாந்த் நடிப்பில் இதுவரை 171 திரைப்படங்கள் வெளியாகி உள்ளன.
- திரை உலகில் சூப்பர் ஸ்டாராக உயர்ந்து, இருமுறை பத்ம விபூஷன் விருது, திரையுலகின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது உட்பட பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார்.
- இந்த நிலையில், சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- “சினிமா உலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்துக்கு வாழ்த்துகள். அவரது பயணம் ஒரு சிறப்புமிக்க அனுபவம். அவரது மாறுபட்ட வேடங்கள் தலைமுறை தலைமுறையாக மக்கள் மனதில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. வரும் காலங்களில் அவர் தொடர்ந்து வெற்றிகளை பெற்று, நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் முதல்முறையாக புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் திரள் அமைக்க அனுமதி:
- இந்திய விண்வெளி வரலாற்றில் முதல்முறையாக புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் திரள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக நடத்தப்பட்ட ஏலத்தில் பங்கெடுத்த 3 கூட்டிணைவுகளை தீவிரமாக ஆராய்ந்தபிறகு, பெங்களூரை சேர்ந்த பிக்ஸல் ஸ்பேஸ் இந்தியா தலைமையிலான கூட்டிணைவுக்கு இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் ஆக. 12-ஆம் தேதி அனுமதி அளித்துள்ளது.
- இந்த கூட்டிணைவு பிக்ஸல் ஸ்பேஸ் இந்தியா, பியர்சைட் ஸ்பேஸ், ஸôட்ஷூர் அனாலிட்டிக்ஸ் இந்தியா, துருவா ஸ்பேஸ் நிறுவனங்களை உள்ளடக்கியதாகும்.
- அரசு, தனியார் கூட்டுமுயற்சியில் செயல்படுத்தப்பட இருக்கும் இந்த திட்டத்தின்கீழ், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1,200 கோடி முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
- புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் திரள், 12 செயற்கைக் கோள்களை கொண்டதாகும். இதனை வடிவமைத்து, கட்டமைத்து, செயல்படுத்தும் முழுபொறுப்பும் பிக்ஸல் ஸ்பேஸ் இந்தியா தலைமையிலான கூட்டிணைவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் திரளில் பாராக்ரோமாட்டிக், மல்ட்டிஸ்பெக்ட்ரல், ஹைபர் ஸ்பெக்ட்ரல், மேக்ரோவேவ் சிந்தடிக் அபர்ச்சர் ரேடார் சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கும்.
- இது, வானிலை மாற்றக் கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை, வேளாண்மை, உள்கட்டமைப்பு, கடல் கண்காணிப்பு, தேசிய பாதுகாப்பு, நகர்ப்புற திட்டமிடல்
- உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தக்கூடிய திறனாய்வுக்கு உகந்த தரவுகள், மதிப்புக் கூட்டப்பட்ட சேவைகளை அளிக்கும். இதுதவிர, உலக அளவில் தேவைக்கேற்ற புவியியல் நுண்ணறிவு தரவுகளையும் வழங்கும்.
- இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் உயர் தெளிவுத்திறன் மற்றும் உள்நாட்டு தரவுகளை உறுதி செய்ய முடியும். மேலும், இதுபோன்ற தரவுகளுக்கு வெளிநாடுகளை சார்ந்திருக்க வேண்டியதில்லை.
- இதுதவிர, தரவு இறையாண்மையை உறுதி செய்வதோடு, விண்வெளிசார் தரவுகள் அடிப்படையிலான தீர்வுகளை முன்வைக்கும் நாடுகளின் வரிசையில் இந்தியா இடம்பெறும் என இன்ஸ்பேஸ் ம் என இன்ஸ்பேஸ் தெரிவித்துள்ளது.
இல. கணேசன் காலமானார்:
- சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இல. கணேசன் 15.08.2025 காலமானார்.
- நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் (80). பாஜகவில் மாநில தலைவர், தேசிய செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
- தஞ்சாவூரில் 1945-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ம் தேதி இலக்கு மிராகவன் - அலமேலு தம்பதிக்கு 7-வது மகனாக பிறந்தவர் இல. கணேசன். சிறுவயதில் தந்தையை இழந்த இல.கணேசன், சகோதரர்களின் அரணைப்பில் வளர்ந்தார்.
- 1970-ம் ஆண்டு அரசு வேலையை விட்டுவிட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பின் முழு நேர செயல்பாட்டாளராக பொது வாழ்வில் இணைந்தார்.
- பாஜகவின் நீண்ட கால உறுப்பினராக இருந்து வந்த இல.கணேசன், 2021-ல் மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். பின்னர், மேற்கு வங்க ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பை கவனித்து வந்த நிலையில், 2023-ல் நாகாலாந்து ஆளுநராக நியமிக்கப்பட்டு தற்போது வரை ஆளுநர் பதவியில் இருந்து வந்தார்.
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி 2025 :
- சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்று வந்தது. போட்டியின் 9-வது மற்றும் கடைசி சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.
- 8-வது சுற்றின் முடிவிலேயே 6 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் வெல்வதை உறுதி செய்திருந்தார் ஜெர்மனி கிராண்ட் மாஸ்டரான வின்சென்ட் கீமர். அவர், தனது கடைசி சுற்றில் அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான ரே ராப்சனுடன் மோதினார்.
- இதில் கருப்பு காய்களுடன் விளையாடிய வின்சென்ட் கீமர் 41-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர், இந்தத் தொடரில் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றார். மேலும் லைவ்ரேட்டிங்கில் 2750.9 புள்ளிகளுடன் 10-வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
- கடைசி சுற்றின் முடிவில் வின்சென்ட் கீமர் 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார். நெதர்லாந்தின் அனிஷ் கிரி 5 புள்ளிகளுடன் 2-வது இடமும், அர்ஜுன் எரிகைசி 5 புள்ளிகளுடன் 3-வது இடமும் பிடித்தனர். கார்த்திகேயன் முரளி (5), நிஹால் சரின் (4.5), அவாண்டர் லியாங் (4.5), விதித் குஜராத்தி (4), ஜோர்டன் வான் பாரஸ்ட் (4), வி.பிரணவ் (3), ரே ராப்சன் (3) ஆகியோர் முறையே 4 முதல் 10 இடங்களுடன் தொடரை நிறைவு செய்தனர்.
- குவாண்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் 2025 தொடரில் மாஸ்டர்ஸ் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற வின்சென்ட் கீமருக்கு ரூ.25 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. அத்துடன் 24 ஃபிடே சர்க்யூட் புள்ளிகளும் அவருக்கு கிடைத்தது.
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!