தமிழ்நாடு இல்லம் தேடி கல்வி திட்டம்:
- கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் இயங்காமல் இருந்தன. அதனால், பள்ளி செல்லும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டது. ஆனால் தொடக்க, நடுநிலை பள்ளி குழந்தைகளால் ஆன்லைன் மூலம் கல்வி கற்பிப்பதில் சற்று சிரமம் நீடித்தது. இதனால், கல்வி முழுவதுமாக பாதிக்கப்பட்டதுடன் கற்றல் இடைவெளியும் ஏற்பட்டது.
- இதை சரிசெய்வதற்காக தமிழக பள்ளிக் கல்வித் துறை இல்லம் தேடி கல்வி திட்டம் (Illam Thedi Kalvi Thittam) என்ற உன்னத திட்டத்தை கொண்டு வந்தது. இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 27 அக்டோபர் 2021 அன்று தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் வாயிலாக பள்ளி சென்ற மாணவர்களுக்கு மாலை நேரங்களில் தன்னார்வலர்கள் மூலம் கல்வி கற்பிக்கப்படுகிறது.
- அவர்களுக்கு மாதம் ரூ.1000 ஊக்க ஊதியமாக வழங்கப்படுகிறது. முதலில் 12 மாவட்டங்களில் தொடங்கப்பட்ட இத்திட்டம் பின்னர் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. இத்துடன், குழந்தைகளிடம் வாசிப்புப் பழக்கத்தை வளர்ப்பதற்காக இல்லம் தேடி மைய நூலகங்களும் தொடங்கப்பட்டன.
இல்லம் தேடி கல்வி திட்டத்தின் நோக்கம்:
- ஆன்லைன் கற்றல் முறைகளை நீக்கி, நேரடி ஈடுபாட்டின் மூலம் குழந்தைகளுக்கு கல்வியை வழங்கி, அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தி தமிழத்தில் சிறந்த கல்வி முறையை கொண்டுவர வேண்டும் என்பதே இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் முதன்மையான நோக்கமாகும்.
- அதுமட்டுமல்லாமல், 1 லட்சம் மாணவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கு ஊக்குவிப்பதற்காகவும், கல்வித் துறையை மேம்படுத்துவதும் இத்திட்டத்தின் மற்றொரு நோக்கமாக உள்ளது. மேலும், நியமிக்கப்பட்ட தன்னார்வலர்களின் உதவியுடன், மாநிலத்தில் உள்ள அனைத்து மாணவர்களும் கல்வி பெறும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
இல்லம் தேடி கல்வி திட்டத்தின் பயன்கள்
- இத்திட்டம் மூலம் ஊரடங்கு காலங்களில் கல்வி பெற முடியாத 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் அவர்களின் வீடுகளுக்கு அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான இடங்களில் தினமும் 1 மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம், அதாவது மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை ஆடல், பாடல், நாடகம், பொம்மலாட்டம் போன்றவை மூலம் புதுமையான முறையில் பாடம் கற்றுக்கொடுக்கப்படுகிறது.
- இதனால் போக்குவரத்து வசதிகள் இல்லாத கிராமப்புறங்களில் உள்ள அனைத்து ஏழை, எளிய மாணவர்களும் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடையலாம். அதுமட்டுமில்லாமல் படித்த இளம் பெண்கள், திருமணமான பெண்கள் மற்றும் படித்தும் வேலையில்லாம இருக்கும் இளைஞர்கள் ஆகியோருக்கு இதில் தன்னார்வலராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்து உள்ளது.
- வேலையோடு சேர்த்து அவர்களை ஊக்குவிக்கும் விதமாக ரூ.1000 உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. இதனால் அவர்களுடைய வாழ்வாதாரமும் உயர்ந்துள்ளது என்று சொல்லலாம். இதுமட்டுமல்லாமல், இத்தகைய புதுமையான முயற்சி மூலமாக குழந்தைகளிடையே கல்வி பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்கப்பட்டு உள்ளது. மேலும், பெற்றோர்களிடையே அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதற்கான முக்கியத்துவத்தையும் அறிந்துக் கொள்ள ஏதுவாக உள்ளது.