முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சீரிய வழிகாட்டுதலில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் 'நலம் நாடி' என்ற புதிய செயலி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான இணையதளம் (09.01.2024) தொடங்கப்பட்டது.
மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்களது கல்வியினை எவ்வித தடையுமின்றி பெற வேண்டும் என்ற அக்கறையில் தமிழ்நாடு அரசு பல முக்கியமான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் வாயிலாக பல மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உடல் பரிசோதனை நடத்தப்படுகிறது.
இதன் வாயிலாக அவர்களுடைய குறைபாடுகள் கண்டறியப்பட்டு அதனைக் களைவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறாக மாணவர்களிடையே ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அதனைக் கண்டறியவே “நலம் நாடி” எனும் செயலி தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.
சிறப்புப் பயிற்றுனர்கள் இச்செயலியைப் பயன்படுத்தி குறைபாடுகளை எளிதில் கண்டறிவார்கள். மாணவர்களுக்கு பிறக்கும் போதே ஏற்பட்டுள்ள குறைபாடுகள், வளர்ச்சியில் ஏற்படும் தாமதங்கள், மற்றும் பிற குறைபாடுகள் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்படுகின்றன.
பள்ளிகளில் ஆசிரியர்களால், இக்குறைபாடுகள் அடையாளம் காணப்பட்டு, பின்னர் சிறப்புப் பயிற்றுநர்களால், இந்தச் செயலியைப் பயன்படுத்தி 21 வகையான குறைபாடுகளுக்கு முழுமையான பரிசோதனை மேற்கொள்ள இயலும்.இதன் வாயிலாக மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய கல்வி மற்றும் பிற சலுகைகள் அனைத்தும் உரிய தருணத்தில் கிடைப்பதை உறுதி செய்ய இயலும்.
வகுப்பறையில் அனைவருக்கும் சம வாய்ப்பு அளித்தல் மிகவும் அவசியம். இதனை உறுதி செய்ய “நலம் நாடி” என்ற இச்செயலி பேருதவியாக அமைந்திடும்.